திருக்கனூர் வாக்குச்சாவடியில் காங்கிரஸ் -பாஜக தொண்டர்கள் மோதல்: போலீசார் தடியடி

புதுச்சேரி,

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். வி.ஓ.சி அரசுப் பள்ளிக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களை நீலா என்ற ரோபோ வரவேற்கிறது. இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மண்ணாடிபட்டு தொகுதியில் காங்கிரஸ் – பாஜனதா வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோதுகின்றனர். அதில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் துணை சபாநாயகர் செல்வம் போட்டியிடுகிறார். திருக்கனூர் அரசு உயர்நிலை பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வாக்குச்சாவடியில் பாஜகவினர் அதிகளவில் திரண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த காங்கிரஸ் கட்சியினர், எதற்காக நீங்கள் இங்கு திரண்டு இருக்கிறீர்கள். வாக்காளர் மட்டும் தான் இருக்க வேண்டும்; மற்றவர் இருக்கக்கூடாது என்று பாஜகவினரிடம் தெரிவித்தனர். இதனால், இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி மோதலாக மாறி இருதரப்பினரும் ஒருவொரையொருவர் தாக்கத் தொடங்கினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருக்கனூர் போலீசார் இரு தரப்பினரையும் தடியடி நடத்தி விரட்டி கலைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

Source link