இந்த வகையில் வருகிற 23 -ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
திமுக – காங்கிரஸ் இடையே கூட்டணி இறுதி வடிவம் பெற்ற பிறகும் தொகுதி பங்கீடு பயிற்சி வார்த்தைகள் நிறைவடைந்த பிறகும், இரண்டு கட்சிகளும் பகிரங்கமாக முட்டிக்கொண்டிருக்கின்றன. மேலும் காங்கிரஸ் தேசிய தலைமை திமுகவிற்கு தமிழகத்தில் தனது ஆதரவு முகத்தை காட்டவில்லை என சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து தனது ஏகோபித்த ஆதரவை திமுகவிற்கு வழங்கி வருகிறார். மேலும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
கள்ளக்குறிச்சியில் திருமா பரப்புரை
கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார் பாளையம் கிராமத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், அதிமுகவுக்கு நீங்கள் வழங்க போகிற ஒவ்வொரு ஓட்டும், மோடிக்கு போடுகிற ஓட்டு. அதிமுக முகமூடியை போட்டுக்கொண்டு பாஜக உங்கள் இடத்தில் ஓட்டு கேட்டு வருகிறார்கள் என அவர் பேசியுள்ளார்.
ஜெயலலிதாவின் வருத்தம்
தொடர்ந்து பேசிய அவர், “ஜெயலலிதா அம்மையார் உயிரோடு இருந்தபோது பாஜக உடன் கூட்டணி வைத்து தவறி இழைத்துவிட்டேன் என வருத்தப்பட்டார். மேலும் மோடியா லேடியா எனக் கேட்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு அச்சுறுத்தலாக அமைந்தவர், இனி எந்த காலத்திலும் பிஜேபியோடு அதிமுக கூட்டணி வைக்காது என உறுதியாக கூறியவர். அவரின் கட்சி இன்று எந்த நிலையில் இருக்கிறது என்பதை நம்மால் பார்க்க முடியும்” என பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் பாஜக வளரக் கூடாது என ஜெயலலிதா விரும்பினார். ஆனால் அது எல்லாம் இன்று எடப்பாடி பழனிச்சாமி காற்றில் பறக்க விட்டு பாஜகவிற்கு அடிமை ஆகிவிட்டார்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
- தப்பித்தவறி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால் பாஜக -தான் தமிழகத்தை ஆளும். இது எல்லாம் எடப்பாடிக்கு தெரிந்திருந்தும் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார்.
- வெறுப்பு அரசியலை தரும் பாஜக தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது என தனது பரப்புரையில் பேசியிருக்கிறார்.
- மேலும் தமிழகத்தில் அதிமுக போர்வைக்குள் பாஜக வளர்ந்து விடக்கூடாது என வலியுறுத்திய அவர் ஒற்றுமையுடன் வாழ்கிற மக்களை பிளவுபடுத்துகிற சக்தி வேண்டாம் எனவும் தமிழகத்தில் பிற்போக்கு கட்சிகள் காலூன்ற விட வேண்டாம் எனவும் அவர் மக்களிடையே கேட்டுக்கொண்டுள்ளார்.
- தொடர்ந்து கூட்டணி விவகாரம் குறித்து பேசிய அவர் சீட்டு பேரம், கூட்டணி கணக்கீடுகளை எல்லாம் நம்பி நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை.
- தப்பித்தவறி அதிமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் காரைக்குடி எச். ராஜா கூட தமிழ்நாட்டின் முதல்வர் ஆகலாம் என அவர் பேசி இருக்கிறார்.
