கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்திருப்பார் எடப்பாடி பழனிசாமி: ஆர்.எஸ்.பாரதி தாக்கு

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு முழுவதிலும் அவருடைய சுற்றுப்பயணத்தில் மக்கள் காட்டுகிற வரவேற்பையும், ஆதரவையும் பார்த்துத் தாங்கிக் கொள்ள முடியாமல், எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு நாளும் வயிற்றெரிச்சலின் காரணமாக ஒவ்வொரு விதமாகப் பிதற்றிக் கொண்டிருக்கிறார்.

தேர்தல் பிரசாரத்தில் எப்படிப் பிரச்சாரம் செய்ய வேண்டும், ஒரு தலைவர் எப்படிப் பேச வேண்டும் என்ற இலக்கணம் இருக்கிறது. அந்த இலக்கணத்தை எல்லாம் மீறக்கூடிய வகையில் தரம் தாழ்ந்து, மிகக் கேவலமாக, மனித சமுதாயத்துக்கே புறம்பான பேச்சை எல்லாம் இன்றைக்கு பழனிசாமி பேசி வருகிறார். நேற்றைய தினம் அவருடைய வயிற்றெரிச்சலின் உச்சக்கட்டமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மிகவும் கீழ்த்தரமாகப் பேசியிருக்கிறார்.

வயிற்றெரிச்சலின் காரணமாக எடப்பாடி எவ்வளவு வாய்க்கொழுப்பு இருந்தால், திமிர் இருந்தால் “கொரோனாவிலே தளபதி போய் சேர்ந்திருப்பார்” என்று சொல்லுவார்?. 1979-லே மூன்று பேரைக் கொலை செய்த வழக்கில் கொலைக்குற்றவாளியாக இருந்து, அந்த வழக்கில் அவர் எப்படி வெளியே வந்தார் என்பது எல்லாம் எல்லோருக்கும் தெரியும். அந்தப் பகுதியில் இருக்கிற மக்களுக்கும் தெரியும்.

அன்றைக்கு அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருந்தால், இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி ஆயுள் கைதியாகத்தான் இருந்திருப்பார். அப்படிப்பட்ட பழனிசாமிக்கு ஒரு பழமொழி சொல்லுவார்கள், “நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அதனுடைய புத்தி போகாது” என்று. அதுபோல இவருடைய அந்த கொலைவெறி, அந்த உயிரைப் போக்குகிற மனப்பான்மை இன்னும் போகவில்லை என்பதை நேற்றைய தினம் அவருடைய பேச்சின் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் இருக்கிற திமுக தொண்டர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களும் கொதித்துப் போயிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் மு.க.ஸ்டாலின் சமாதானப்படுத்தி இருக்கிறார். இவருடைய பழைய கதைகளை எல்லாம் நாங்கள் பேச ஆரம்பித்தால் அவ்வளவு தான்.

திமுக ஆட்சியின் சாதனைகளில் அவரால் எந்தக் குறையும் சொல்ல முடியவில்லை. ஒவ்வொரு திட்டமும் மக்களைச் சென்றடைந்து மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது. இதனைத் தாங்கிக் கொள்ள முடியாமலும், உளவுத்துறை தகவல்களின்படி திமுக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறப்போகிறது என்பதை அறிந்தும் அவர் இத்தகைய மலிவான அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

காமராஜர் மறைந்தபோது அவருக்குச் செய்ய வேண்டிய அத்தனை மரியாதைகளையும் செய்தவர் கலைஞர். எமர்ஜென்சி காலத்தில் காமராஜரைக் கைது செய்ய மறுத்த காரணத்தினாலேயே திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. காமராஜர் மறைந்தபோது எங்கே அடக்கம் செய்வது என்ற குழப்பம் இருந்தபோது, அவர் வாழ்நாள் முழுவதும் காந்தியவாதியாக வாழ்ந்ததால் காந்தி மண்டபம் அருகிலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தவர் கலைஞர்.

கொட்டும் மழையில் இரவோடு இரவாக அந்த இடத்தை நிலத்தைச் சீர்படுத்தி அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. “காமராஜருக்குக் கொள்ளி வைக்க மகன் இல்லை என்ற குறையை கருணாநிதி தீர்த்து வைத்தார்” என்று அன்றைய காங்கிரஸ் தலைவர்களே மனதாரப் பாராட்டினர். ஜானகி அம்மாள் குறித்துப் பேச பழனிசாமிக்குத் தகுதியே கிடையாது. எம்ஜிஆர்-ஜானகி திருமணத்தை நடத்தி வைத்ததே கலைஞர்தான்.

1989-இல் கலைஞர் முதல்-அமைச்சரானபோது அவரை முதலில் வாழ்த்தியவர் ஜானகி அம்மாள். இன்று எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருக்கும் அதிமுக அலுவலகக் கட்டடமே ஜானகி அம்மாள் தானமாக வழங்கிய இடம்தான். ஜானகி அம்மாள் மீது இவ்வளவு பாசம் காட்டும் எடப்பாடி பழனிசாமி, முதல்-அமைச்சராக இருந்த நான்கு ஆண்டுகளில் அவருக்கு ஒரு சிலையாவது அங்கோ அல்லது ராமாபுரம் தோட்டத்திலோ வைத்துள்ளாரா? இன்று ராமாபுரம் தோட்டம் சுடுகாடு போலக் கிடக்கிறது.

ஜானகி அம்மாளின் பிறந்தநாளுக்கோ அல்லது நினைவு நாளுக்கோ ஒரு மலர் வளையமாவது எடப்பாடி பழனிசாமி வைத்ததுண்டா?. தேர்தல் நேரத்தில் இத்தகைய தில்லுமுல்லான, திருட்டுத்தனமான பேச்சுக்களைப் பேசுவதைப் எடப்பாடி பழனிசாமி வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அவர் இவ்வளவு கீழ்த்தரமாகப் பேசுவதால் எங்களுக்கு வாக்குகள் கூடுமே தவிரக் குறையாது. உண்மையான காங்கிரஸார் அனைவரும் எங்கள் பக்கமே இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Source link