வேற வேலையே இல்லையா? திருப்பரங்குன்ற விவகாரத்தில் புதிய மனு – கடுப்பில் ரூ.50 ஆயிரம் விதித்த நீதிபதிகள்! – new petition filed in tirupparankundram issue dismissed court imposes fine expresses strong displeasur

2025 -ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த மதம் மற்றும் பண்பாட்டு ரீதியான பிரச்சினைகளில் மிக முக்கியமான ஒரு பிரச்சனை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் . திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற மனு விவகாரம் தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதித்தார். அதே மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவும் இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக்கூறி தமிழக அரசு தீபம் ஏற்றும் நடவடிக்கையை தடுத்தது.
நீதிமன்ற உத்தரவையும் மீறி தமிழக அரசு தீபம் ஏற்ற தடுத்ததால் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் தான் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இந்துக்கள் சென்று தீபம் ஏற்றி வழிபட அனுமதிக்க வேண்டும் என புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த மனுவில் “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த இந்து மக்களுக்கு அனுமதி மறுத்த அதிகாரிகள் ரம்ஜான் தினத்தில் இஸ்லாமியர்கள் மலை உச்சியில் சென்று வழிபட அனுமதி அளித்துள்ளனர். எனவே கடமை தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இந்து மக்களை வழிபட அனுமதிக்க வேண்டும்” என பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்திற்கு பிறகு பல பல மனுக்கள் வருவதால் நீதிபதிகள் கடுப்பில் உள்ளனர்.

கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்
  • திருப்பரங்குன்றத்தை தவிர நாட்டில் வேறு பிரச்சினையே இல்லையா? திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து எத்தனை மனுக்களைத்தான் தாக்கல் செய்வீர்கள்? நீதிமன்றத்திற்கு வேறு வேலையே இல்லையா என கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
  • இந்த மனுவை விசாரிக்க வேண்டும் என்றால் மனுதாரர் ரூபாய் பத்து லட்சம் கோவில் வைப்பு நிதிக்கு தர வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
  • அரசியல் லாபத்திற்காக இது போன்ற மனுக்களை தாக்கல் செய்வது வாடிக்கையாகி விட்டது.
  • மனுதாரர் ஊடகங்களில் தங்கள் பெயர் வர வேண்டும் என்பதால் இது போன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறார்கள்.
அபராதம் விதித்த நீதிமன்றம்

விசாரணையின்போது ஒன்றிய அரசின் வழக்கறிஞர் ஆஜராகி திருப்பரங்குன்றம் விவகாரத்திற்கு பிறகு மனுதாரர் இதே வேலையாக தான் இருப்பது போல தெரிகிறது. இதனால் அரசுக்கு பெறும் இழப்பீடு ஏற்படுகிறது. எனவே மனுவை அப்படியே தள்ளுபடி செய்தால் மீண்டும் மீண்டும் இதே போன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படும். ஆகவே அதிகபட்சமாக அபராதம் விதித்து மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

மேலும் அரசு தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன் குறுக்கிட்டு “இது போன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது.எனவே அதிகபட்ச அபராதங்கள் விதிக்க வேண்டும்” என அவரும் கூறி இருந்தார். இந்த நிலையில் தான் நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

அபராதத்தை கட்ட முடியாது

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “அபராத தொகையை எங்களால் கட்டவே முடியாது. இனி இது போன்ற மனுக்களை தாக்கல் செய்ய மாட்டோம். அபராதத்தை விதிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து நீதிபதிகள் ஐம்பதாயிரம் அபராதம் விதித்தனர். இதற்கும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எங்களுக்கு கட்டுப்படியாகாது எனவும் நீதிமன்றம் தங்களுக்கு கருணை காட்ட வேண்டும். வழக்கை திரும்ப பெற்ற கொள்கிறோம் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

நீதிபதிகள் “மனுதாரர் ஊடகங்களில் தங்களது பெயர் வர வேண்டும் என்ற நோக்கில் இது போன்ற மனுக்களை தொடர்ந்து தாக்கல் செய்வதாக தெரிகிறது. எனவே இது போன்ற தேவையற்ற மனுக்களை பொதுநல வழக்காக தாக்கல் செய்ய மாட்டேன் என நீதிமன்றத்தில் உறுதிமொழி பத்திரம் வழங்கும் பட்சத்தில் மனுதாரருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும்” என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

Source link