பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தேர்தல் வியூகம்… திரு.வி.க நகரை மாற்றும் மாஸ்டர் பிளான்- இந்த மக்களுக்கு ஏதாச்சும் செய்யணும்! – porkodi armstrong sympathy and civic plan for thiru vi ka nagar 2026 assembly election

திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வீடு வீடாக சென்று தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் தனது சொந்த தொகுதி மக்களுக்கு என்னென்ன செய்ய திட்டமிட்டிருக்கிறார் என விரிவாக இங்கே பார்த்துவிடலாம்.

வடசென்னை மக்களுடன் மிகவும் நெருங்கி பழகி, அவர்களுக்கு பல்வேறு வசதிகளையும், வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வு அவரது குடும்பத்தை மட்டுமின்றி, அவரது ஆதரவாளர்களையும் புரட்டி போட்டது. கணவரின் வழியில் புத்த மதத்தை தழுவிய பொற்கொடி, தற்போது தீவிர அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அரசியல் வேண்டுமானால் எனக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு தொண்டு செய்வதும், நிர்வாகத்தை சரியாக திட்டமிட்டு செயல்படுத்துவதும் புதிதல்ல என்று கூறி களத்தில் இறங்கியுள்ளார்.

தீவிர அரசியலில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்

ஆம்ஸ்ட்ராங் இருக்கும் வரை அரசியல் பக்கம் வர வேண்டிய தேவை ஏற்படவில்லை. அவரது மரணத்திற்கு பின்னர் நேரடியாக அரசியலுக்கு வந்து, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற பெயரில் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். தனது கணவரின் கொலைக்கு நீதி கேட்டு போராடி வரும் நிலையில், தான் சார்ந்த தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என விரும்புகிறார். இதையொட்டி 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து திரு.வி.நகர் தனித் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். தற்போது பிரச்சார களத்தில் மிகவும் பிஸியாக இயங்கி கொண்டிருக்கிறார்.

பா.ரஞ்சித் செய்ததில் என்ன தவறு? பொற்கொடி ஜெயிக்க வேண்டும்!

இரட்டை இலை சின்னத்தில் போட்டி

கூடவே தனது இரண்டரை வயது குழந்தை சாவித்திரி பாயையும் அழைத்து செல்வதை பார்க்க முடிகிறது. ஒரு வீட்டை கூட விடுவதில்லை. சிறிய தெருக்கள், குறுகிய பாதைகளிலும் நுழைந்து மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து கொண்டிருக்கிறார். இவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதால், ”அம்மாவிற்கு ஓட்டு போடுங்க, இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க” என்று குரல் கொடுத்து கொண்டே செல்கிறார். இந்த தேர்தலில் பொற்கொடி வெற்றி பெறுவதற்கு தனது கணவர் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தின் மீதான அனுதாபத்தை மட்டும் நம்பியிருக்கவில்லை.

திரு.வி.நகர் மாடல் தொகுதி பிளான்

அதையும் தாண்டி சில திட்டங்களை கைவசம் வைத்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. திரு.வி.நகர் தொகுதியில் தான் சிறு வயது முதல் வசித்து வருகிறார். எனவே ஒவ்வொரு மூலை முடுக்கையும் நன்கு அறிந்து வைத்துள்ளார். இங்குள்ள மக்களுக்கு என்ன பிரச்சினை என்பதும் முழுமையாக தெரியும். இதன் அடிப்படையில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதன்படி, திரு.வி.நகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவேன் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்து வருவது கவனம் பெற்று வருகிறது.

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தொலைநோக்கு திட்டம்

சுகாதாரமான சூழ்நிலை, போதிய எண்ணிக்கையில் கழிவறை, பொதுமக்களின் பாதுகாப்பு, கல்வி வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தர திட்டமிட்டுள்ளார். மேலும் மொபைல் டாய்லெட், சிசிடிவி கேமரா வசதி, குடிநீர், சாலை வசதிகளையும் செய்து கொடுக்க விரும்புகிறார். இதுதொடர்பான விவரங்கள் அடங்கிய தேர்தல் வாக்குறுதி பட்டியலை விரைவில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார். தொகுதி மக்களாலும், கட்சியினராலும் ”அண்ணி” என்று அன்புடன் அழைக்கப்படும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கின் வெற்றி அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுமா? என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.

பலம் வாய்ந்த திமுக

திரு.வி.நகர் தொகுதியை பொறுத்தவரை 2011 முதல் மூன்று தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் அதிமுக 1, திமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிலும் கடைசி இரண்டு முறை தொடர்ந்து திமுக வென்று தனது செல்வாக்கு பெற்ற தொகுதியாக மாற்றி வைத்திருக்கிறது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் பி.சிவக்குமாருக்கு வாய்ப்பளித்த திமுக தலைமை, இம்முறை கே.எஸ்.ரவிச்சந்திரனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. எனவே கட்டமைப்பு ரீதியாக பலமாக இருக்கும் திமுகவின் செல்வாக்கை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. மற்ற கட்சிகளில் பிரபல வேட்பாளர்கள் யாரும் இல்லை. எனவே திமுக vs பொற்கொடி என இரண்டு முனைப் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும்.