தவெக பொருளாளர் வெங்கட்ரமணன் மீது மனைவி சென்னை போலீசில் புகார் அளித்துள்ளார். குழந்தையை மீட்டு தர கோரிக்கையும் விடுத்துள்ளார்.
தவெக பொருளாளர் வெங்கட்ராமன் மனைவி காவல் ஆணையரகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
வெங்கட்ரமணன்
நான் மேலே சொன்ன முகவரியில் எனது தாயாருடன் வசித்து வருகிறேன். சென்னை பம்மல் பகுதியை சார்ந்த பத்மநாபன் மகன் வெங்கட்ரமணன் என்பவருக்கும் எனக்கும் 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் 2016-ம் ஆண்டு யோகவர்ஷினி என்ற பெண் குழந்தை பிறந்தது. பின்னர் எனது கணவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தோம். பின்னர் சென்னை குடும்ப நல நீதிமன்றம் எங்களை சேர்ந்து வாழ உத்தரவு பிறப்பித்தது. பின்னர் எனது கணவர் தற்சமயம் என்னுடன் வாழாமல் எனது 9 வயது குழந்தையை என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக எடுத்து சென்று விட்டார்.
தவெக மாநில பொருளாளர்
தற்சமயம் எனது கணவர் வெங்கடரமணன் நடிகர் விஜய் அவர்களு நடத்தும் தவெக மாநில பொருளாளராகவும், தற்சமயம் மைலாப்பூர் தொகுதி வேட்பாளராகவும் உள்ளார். இதனால் என்னுடைய குழந்தையை என்னிடம் ஒப்படைக்காமல் என்னை மிரட்டி ஏமாற்றி வருகிறார். மேலும் எனது குழந்தையை என் கண்ணில் காட்டாமல் அவருடைய பாதுகாப்பில் சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்துள்ளார். எனவே ஐயா அவர்கள் எனது குழந்தையை எனது கணவர் வெங்கடரமணனிடமிருந்து மீட்டுதருமாறும் என்னை மிரட்டும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.என்று தெரிவித்துள்ளார்.
மைலாப்பூர் சட்டமன்றத் தொகுதி
தற்போது நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், மைலாப்பூர் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக வெங்கடரமணன் அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொருளாளர் மற்றும் வேட்பாளர் என்ற அதிகாரமிக்க பொறுப்பில் இருப்பதால், தன்னைக் குழந்தையைப் பார்க்க விடாமல் மிரட்டி வருவதாகவும், அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏமாற்றி வருவதாகவும் அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார். ஒரு தாயாகத் தனது குழந்தையைக் காண்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும், தனது குழந்தையின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு குறித்து அச்சமாக இருப்பதாகவும் அவர் அந்த மனுவில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில், கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒரு வேட்பாளர் மீது இத்தகைய தீவிரமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனிநபரின் குடும்ப பிரச்சனை
பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூக நீதி குறித்து அரசியல் கட்சிகள் பேசி வரும் சூழலில், ஒரு வேட்பாளரின் குடும்பத்திற்குள்ளேயே இத்தகைய சிக்கல்கள் எழுந்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. இது முழுக்க முழுக்க ஒரு தனிநபரின் குடும்பப் பிரச்சனை என்றாலும், அவர் ஒரு பொதுவாழ்வில் இருக்கும் நபர் என்பதால் காவல்துறை இந்த மனு மீது எத்தகைய விசாரணையை மேற்கொள்ளப் போகிறது என்பது முக்கியத்துவம் பெறுகிறது. குழந்தையின் நலன் கருதி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதே சமயம், இந்த விவகாரத்தில் வெங்கடரமணன் தரப்பு விளக்கம் என்ன என்பது இனி வரும் நாட்களில் தெரியவரும்.
