உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம் என்ற தவெக விஜய்.. செல்வப்பெருந்தகை கொடுத்துள்ள பதிலடி – selvaperunthagai comments on tvk vijay speech about congress party

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. இதற்காக சமீபத்தில் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் தற்போது தேர்தல் வாக்குறுதிகளையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் நேற்றைய பேச்சுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.

நெல்லை பரப்புரை பேச்சு
அதாவது நேற்றைய தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நெல்லையில் நடந்த பரப்புரையில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். அப்போது அவர் உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம் தான் இருக்கிறது என்றார். அவருடைய இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் குறித்தான விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

செல்வப்பெருந்தகை பதிலடி
இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் விஜய்யை சகோதரர் என குறிப்பிட்டு ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து 140 ஆண்டுக்கால வரலாற்று சிறப்புமிக்க கட்சியான காங்கிரஸ் பற்றி விஜய் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். இப்படிப்பட்ட கட்சியை குறை சொல்வது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியை விஜய்யிடம் முன்வைத்துள்ளார் செல்வப்பெருந்தகை. அதோடு எவ்வளவோ வெற்றிகளையும், தோல்விகளையும் கடந்து 140 ஆண்டுக்காலமாக ஓங்கி நிற்கிறது காங்கிரஸ்.

தவெக விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும்
சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே என நாங்கள் அனைவரும் கட்சி நடத்தி கொண்டிருக்கிறோம். யாருடன் எங்க கட்சி கூட்டணி அமைக்கும் என்பதை தலைமை முடிவு செய்யும் என அதிரடியாக தெரிவித்துள்ளார். அதோடு விஜய் முடிவு செய்ய முடியாது எனவும் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் யாரோ நான்கு பேர் அவர் கட்சியில் சேர்ந்த காரணத்தால் காங்கிரஸ் தன்னுடன் இருப்பதாக சொல்வது எவ்வளவு பெரிய பேராசை. அநாகரிகமான செயல். இந்த அரசியலை எல்லாரும் மாதிரி அவர் செய்யக்கூடாது. இதனை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விபத்தால் உருவான கட்சி
தவெக விஜய்யின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் பதில் எதுவும் கூறாமல் மௌனம் காத்து வந்த நிலையில், செல்வப்பெருந்தகையின் இந்த பேச்சு அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. இதனிடையில் நேற்றைய தினம் விஜய்யின் ரோடு ஷோவில் பல விபத்துக்கள் நிகழ்ந்தது. இதுக்குறித்தும் செல்வப்பெருந்தகை தவெக கட்சியே விபத்தான கட்சி. விபத்தில் ஏறபட்ட கட்சி. ஆகவே அந்த கட்சியில் விபத்து ஏற்படத்தான் செய்யும் என தெரிவித்துள்ளார்.

அஜித் சாலையில் இறங்கி நடந்தால்
அதோடு தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் இதுபோன்ற செயல்களில் இருந்து விஜய் தன்னை விடுவித்து கொள்ள வேண்டுமென கூறியுள்ளார். மேலும் யார் போனாலும் ரசிகர்கள் போவாங்க. இப்போ அஜித் சாலையில் நடந்து போனால் என்ன நடக்கும். கொஞ்சம் கற்பனை செஞ்சு பாருங்க. எனக்கு தெரிஞ்சு எம்ஜிஆருக்கு பிறகு ரஜினி, அஜித் இருவர்கள் தான் பெரிய நட்சத்திரங்கள் என்று விஜய் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் செல்வப்பெருந்தகை.

காங்கிரஸ் தவெக கூட்டணி
முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் சிலர் ஆர்வம் காட்டினார்கள். கூடுதல் சீட்டுகள் கிடைக்கும் என்பதால், தவெகவுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகின. ஆனாலும் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மூத்த தலைவர்கள் திமுகவுடன் கூட்டணியில் தொடரவே ஆர்வம் காட்டினார்கள். இதனையடுத்து கடந்த தடவையை விட கூடுதலாக மூன்று சீட்டுகளுடன் திமுக, காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link