மூன்று மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தல்
சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னமும் 13 நாட்களே மீதமுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பரப்புரை காரணமாக தமிழ்நாடு அரசியல் விறுவிறுப்பாகியுள்ளது. இன்றைய தினம் புதுச்சேரி, அஸ்ஸாம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்த நிலையில், தமிழ்நாட்டில் வரும் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமான பரப்புரைகளில் இறங்கியுள்ளன. அந்த வகையில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கோடு திமுக பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது.
கனிமொழியின் தீவிர பரப்புரை
இந்நிலையில் திமுகவின் துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கிறார். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஏதாவது மாநிலத்துக்கு ஆளுநராக அனுப்பி வைக்கப்படுவார் என பேசியுள்ளார். யார் கால்ல விழுந்து இபிஎஸ் முதலமைச்சர் ஆனாரோ, இன்னைக்கு அந்தம்மாவுக்கே கட்சியில் இடமில்லை என சசிகலா குறித்து பேசினார் கனிமொழி.
பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளின் நிலைமை
தொடர்ந்து அவர் பேசுகையில், ஓபிஎஸ்ஸும் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால் தளபதியால் தான் முடியுமென நம்முடன் இணைந்து விட்டார். எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்னே ஒன்னு சொல்ல விரும்புறேன். பிஜேபியுடன் கூட்டணி வைத்த கட்சிகளின் நிலைமையை அவர் நினைச்சு பார்க்கனும். பீகாரில் பலமுறை முதலமைச்சரான நிதிஷ்குமார் எம்பியாக கூடிய நிலைமை. இபிஎஸ்ஸை என்ன பண்ண போறாங்கன்னு தெரியலை. ஏதாவது மாநிலத்துக்கு ஆளுநராக வேணாலும் அனுப்பலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார் கனிமொழி.
பீகார் நிதிஷ்குமார்
ஏற்கனவே ஒரு பரப்புரையில் இபிஎஸ் தனக்கு பிடித்தமான மாநிலத்தை இப்போதே அமித்ஷாவிடம் சொல்லி வைக்கலாம். தேர்தலுக்கு பின்பாக அவரை அங்கு கவர்னராக அனுப்பி வைப்பார்கள் என பேசியிருந்தார். இதனையடுத்து தற்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமியை ஆளுநர் ஆக்கிவிடுவார்கள் என்று கனிமொழி கூறியுள்ளார். தொடர்ந்து பீகாரில் முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமாரை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியை திமுகவை சார்ந்தவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர்
அதாவது பாஜகவுடன் கூட்டணி அவித்த நிதிஷ்குமார் நிலைமை தான் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்படும் என்று கூறி கொண்டிருக்கின்றனர். அதோடு தேர்தலுக்கு பின்பாக அதிமுகவின் பொதுச்செயலாளரை மாற்றி விடுவார்கள் எனவும் திமுக தலைவர்கள் பேசி வருகிறார்கள். அதே நேரம் எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு தமிழ்நாட்டுக்கான திட்டங்களை நாங்கள் கேட்டு பெறுவோம் என பரப்புரையில் பேசி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி விளக்கம்
இதனிடையில் நேற்றைய தினம் இபிஎஸ் பிரச்சாரத்தில் முதலமைச்சர் கொரோனாவில் போயிருப்பார் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவருடைய இந்த பேச்சுக்கு திமுகவினர் கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்தனர். குறிப்பாக கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் இருவரும் எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தில் என்ன பேசுவது என்றே தெரியாமல் தரம் தாழ்ந்து பேசி வருவதாக விமர்சித்துள்ளனர். அதே நேரம் முதல்வர் குறித்து தவறாக பேசவில்லை என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
