ஐபிஎல் 2026 – BBC News தமிழ்

படக்குறிப்பு, கொல்கத்தாவுக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் (கோப்புப் படம்)

12 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் 15வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

ஹோம் டீமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்னும் தங்கள் முதல் வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

அதேசமயம் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி முந்தைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி நம்பிக்கையோடு இந்தப் போட்டியில் களம் காண்கிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாத தமிழ்நாடு பந்துவீச்சாளர் வருண் சக்கர்வர்த்தி இந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. அதேசமயம் லக்னௌ அணியில் தமிழ்நாடு ஸ்பின்னர் எம்.சித்தார்த் இடம்பிடித்திருக்கிறார்.

டாஸில் சொன்னது என்ன?

டாஸ் வென்ற எல்எஸ்ஜி கேப்டன் ரிஷப் பன்ட், “நாங்கள் முதலில் பந்துவீச விரும்புகிறோம். எதிரணியை முதலில் பேட்டிங் செய்ய வைக்க நினைக்கிறோம், எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு வெற்றி நிச்சயமாக அணியின் மனநிலைக்கு கூடுதல் உற்சாகத்தைத் தரும். நாங்கள் அதே அணியுடன் தான் விளையாடுகிறோம். எங்கள் டாப்-ஆர்டர் பேட்டிங் மிகவும் வலிமையாக இருப்பதாக நாங்கள் உணர்கிறோம், அவர்கள் எங்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று கூறினார்.

கொல்கத்தா கேப்டன் அஜிங்க்யா ரஹானே தானும் பந்துவீச்சை தேர்வு செய்ய நினைத்ததாகவே கூறினார். வருண் சக்கரவர்த்தி இன்னும் காயத்திலிருந்து குணமடையாத காரணத்தினால் அவர் இந்தப் போட்டியிலும் விளையாடப்போவதில்லை என்றும் ரஹானே தெரிவித்தார்.

இரு அணிகளின் பிளேயிங் லெவன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கேகேஆர் அணியில் ஒரு மாற்றமாக முசர்பானிக்குப் பதிலாக சுனில் நரைன் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார். உடல்நலக்குறைவு காரணமாக நரைன் கடந்த போட்டியில் ஆடவில்லை.

பிளேயிங் லெவன்: அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ஃபின் ஆலன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், ரிங்கு சிங், ராவ்மன் பவெல், ரமன்தீப் சிங், அனுகூல் ராய், சுனில் நரைன், நவ்தீப் சைனி, கார்த்திக் தியாகி.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: டிம் செய்ஃபர்ட், மனிஷ் பாண்டே, ராகுல் திரிபாதி, வைபவ் அரோரா, தேஜஸ்வி சிங்

லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ்

லக்னௌ அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பிளேயிங் லெவன்: மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க்ரம், ரிஷப் பன்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), நிகோலஸ் பூரன், அப்துல் சமத், முகுல் சௌத்ரி, எம்.சித்தார்த், ஆவேஷ் கான், மொஹம்மது ஷமி, பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ராதி.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஆயுஷ் படோனி, ஷபாஸ் அஹமது, மயாங்க் யாதவ், ஹிம்மத் சிங், மேத்யூ பிரீட்ஸ்கி

படக்குறிப்பு, காயம் காரணமாக வருண் சக்கரவர்த்தி இந்தப் போட்டியில் விளையாடவில்லை (கோப்புப் படம்)

ஆடுகளம் எப்படி?

இங்கு நடந்த முந்தைய போட்டியில் (கேகேஆர் vs பஞ்சாப் கிங்ஸ் போட்டி) பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளம் தான் இன்றும் பயன்படுத்தப்பட உள்ளது.

ஆடுகளத்தின் ஒரு முனையில் அதிகப்படியான காய்ந்த பகுதிகள் காணப்படுகின்றன. எனவே சுழற்பந்து வீச்சாளர்கள் அந்த முனையிலிருந்து முக்கியமாக பந்து வீசுவார்கள் என்று கருதுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் ஃபாஃப் டு பிளெசி போட்டிக்கு முன்பான தன்னுடைய பிட்ச் ரிப்போர்டில் தெரிவித்தார்.

புதிய பந்து ஸ்விங் ஆக வாய்ப்புள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா கருதினாலும், இது ஒரு அதிக ரன்கள் எடுக்கக்கூடிய போட்டியாகவே இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

ஆடுகளம் சற்று காய்ந்து காணப்பட்டாலும், மழை பெய்வதற்கான அறிகுறி இருப்பதால், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்வதே சரியான முடிவாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.

ஐபிஎல் 2026ல் இதுவரை…

2026 ஐபிஎல் சீசனில், இந்தப் போட்டிக்கு முன்பு வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 போட்டிகளில் விளையாடி 1 புள்ளி மட்டுமே பெற்றிருக்கிறது. முதலிரு போட்டிகளிலும் அவர்கள் தோற்றிருந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான அவர்களின் கடைசிப் போட்டி மழையால் கைவிடப்பட்டது. புள்ளிப் பட்டியலில் கேகேஆர் 9வது இடத்தில் இருக்கிறது.

அதேசமயம் எல்எஸ்ஜி 2 போட்டிகளில் விளையாடி தலா 1 வெற்றி, 1 தோல்வி பெற்றிருக்கிறது. டெல்லி கேபிட்டல்ஸுக்கு எதிராக தோல்வியடைந்து சீசனைத் தொடங்கிய அந்த அணி, கடந்த போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்தியது. அந்த அணி புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link