நான்கு அதிகார மையமாக திமுக செயல்படுகிறது – எடப்பாடி பழனிசாமி

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

முன்னாள் முதல் – அமைச்சராக இருந்த ஜானகி ராமச்சந்திரன் இறந்தபோது அவருக்கு மெரினாவில் இடம் கொடுக்க வில்லை. இதேபோல காமராஜருக்கும் அடக்கம் செய்ய இடம் கொடுக்கவில்லை. முதல்-அமைச்சராக இருந்து இறந்தால் மட்டுமே மெரினாவில் இடம் உண்டு என கலைஞர் சொல்லியதை தான் நான் செய்தேன். கலைஞர் இறந்த போது அவருக்கு கிண்டியில் 2 ஏக்கர் நிலம் கொடுக்க நாங்கள் முன்வந்தோம். அந்த இடத்தின் மதிப்பு 200 கோடி. ஸ்டாலினின் தந்தை முன்னாள் தலைவர்கள் பலரையும் விமர்சனம் செய்து பேசியுள்ளார். நான் பொது வாழ்விற்கு வந்து 51 வருடம் ஆகிறது. யாரையும் விமர்சனம் செய்யமாட்டேன், ஆனால் ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலினும் எங்களை கொச்சையாக பேசுகிறார்கள். நானும் பேசவா நீங்கள் இரண்டு பேரும் திருட்டு ரயிலில் ஏறி வந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் . நான்கு அதிகார மையமாக திமுக செயல்படுகிறது. மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், சபரீசன், என ஆட்சியில் அதிகாரம் செய்ய வந்து விட்டனர்.

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கஞ்சா வியாபாரம் அதிகமாகிவிட்டது. இந்த அரசாங்கம் இருக்கிற வரை கஞ்சா வியாபாரத்தை ஒழிக்க முடியாது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 3 மாதத்தில் கஞ்சா கடத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்படும். இந்த துறைமுகம் தொகுதி ஏழை மக்கள் நிறைந்தபகுதி. எல்லாதுறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. டாஸ்மாக்கில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 25ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. அண்ணா பல்கலைகழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து அதிமுக ஆட்சி வந்தவுடன் தீர்வு காணப்படும்.

இந்த தொகுதியில் திமுகவில் சார்பில் போட்டியிடும் அமைச்சர் அறநிலையத்துறையின் கீழ் இருந்த தங்கநகைகளை உருக்கிவிட்டார். இதில் யார் தவறு செய்தாலும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகவில் இருந்தவர் வேட்டியை மாற்றிக் கட்டி கொண்டு அங்கே சென்று விட்டார். அவருக்கு அடையாளம் கொடுத்த கட்சி அதிமுக. அதை மறந்து கட்சிக்கு துரோகம் விளைவித்து அங்கே சென்றுவிட்டார். கையில் அதிமுக பச்சை குத்தியுள்ளார். வேறு கட்சிக்கு சென்றுவிடுவார்கள் என்று தான் பொன்மனச்செம்மல் அதிமுகவில் உள்ள அனைவருக்கும் பச்சை குத்தி விட்டிருக்கிறார்.

அதிமுகவிற்கு துரோகம் நினைக்கும் யாரையும் அம்மா மற்றும் புரட்சி தலைவரின் ஆன்மா மன்னிக்காது. திமுக அமைச்சரவையில் இன்று இருக்கும் 8 பேர் அதிமுகவில் இருந்து சென்றவர்கள் மற்றும் இப்போது திமுகவில் போட்டியிடும் 19 வேட்பாளர்கள் அதிமுகவில் இருந்து சென்றவர்கள். ஊழல் ஆட்சி அகற்றப்படவேண்டும்.

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரேஷன் கடைகளில், மளிகை கடைகளில் வழங்கப்படுவது போல தரமான அரிசி வழங்கப்படும். அரிசி இலவசமாக வழங்கப்படுவதுபோல பருப்பு மற்றும் பாமாயில் இலவசமாக வழங்கப்படும். மூடிய அம்மா உணவகம் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்படும். பணியாளர்கள் தேவையான அளவு வழங்கப்பட்டு ருசியான உணவு வழங்கப்படும். அம்மா உணவகம் முதல்-அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Source link