சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நாளை 4 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்து, பெண்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிய திமுக ஆட்சியை அகற்றுவதற்காக நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், உதகமண்டலம், காங்கேயம், அரவக்குறிச்சி, கரூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி, நாளை மாலை (10.04.2026) பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறேன்.
இருண்ட காலத்திலிருந்து தமிழகத்தை மீட்டு, நல்லாட்சியும் வளர்ச்சியும் அமைய, பொதுமக்கள் அனைவரும் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
