இரான் போர் நிறுத்தம்: மத்திய கிழக்கில் இனி இந்த 3 மாற்றங்கள் நிகழுமா?

ஒரே நாளில், டொனால்ட் டிரம்ப் இரானின் நாகரிகம் “இன்று இரவு அழிந்துவிடும்” என்ற மிரட்டலில் இருந்து, பேச்சுவார்த்தைக்கு அறிவிக்கும் நிலைக்கு மாறிவிட்டார்.

இந்த போர்நிறுத்தம், முதன்மையாக, பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கியதிலிருந்து தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள பொதுமக்களுக்குக் கிடைத்த ஒரு நிம்மதியாகும்.

அவர்களில் லெபனான் மக்கள் சேரவில்லை. போர்நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது என்று பிடிவாதமாகக் கூறிய பிறகு, இஸ்ரேல் ஒரு பெரிய மற்றும் பயங்கரமான வான்வழித் தாக்குதல்களை அங்கு நடத்தியது.

மற்ற இடங்களில் கிடைத்துள்ள நிம்மதி நீண்ட காலம் நீடிக்காமல் போகலாம். இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு தரப்பிற்குமே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வலுவான காரணங்கள் உள்ளன.

ஆனால், அவர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ள நிலைப்பாடுகள் ஒன்றுக்கொன்று மிகவும் விலகி இருக்கின்றன.

ஒருவரையொருவர் நம்பாத இரண்டு தரப்பினருக்கும் இடையே ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயல இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளன.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்த போர்நிறுத்தத்தை ஒரு “பலவீனமான போர் நிறுத்தம்” என்று விவரித்தார். அது ஒரு எதார்த்தமான மதிப்பீடுதான்.

இரு தரப்பிலிருந்தும் எதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட பல கூற்றுகள் வருகின்றன, ஏனெனில் இரு தரப்புமே ஒரே நேரத்தில் தாங்கள் வெற்றி பெற்றதாகக் கூறுகின்றன.

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் செய்தியாளர்களிடம், இது அமெரிக்காவிற்கு கிடைத்த “பெரிய வெற்றி” என்று கூறினார்.

“பயங்கரவாதத்தை ஆதரிக்கும் உலகின் முன்னணி நாடான இரான், தன்னையோ, தனது மக்களையோ அல்லது தனது நிலப்பரப்பையோ தற்காத்துக் கொள்ள முற்றிலும் திறமையற்றது என்பதை நிரூபித்துவிட்டது,” என்று அவர் கூறினார்.

இதேபோன்ற ஆரவாரமான கூற்றுகள் இரானிலிருந்தும் வருகின்றன, அங்கிருக்கும் ஆட்சியும் ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றதாகக் கூறுகிறது.

இரானின் முதல் துணை அதிபர் முகமது ரெசா ஆரிஃப் சமூக ஊடகங்களில், “உலகம் ஒரு புதிய அதிகார மையத்தை வரவேற்றுள்ளது, மேலும் இரானின் சகாப்தம் தொடங்கிவிட்டது” என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது நடத்திய மறுக்க முடியாத கடுமையான அழிவுகள், இரானை பேச்சுவார்த்தைக்கு வரக் கட்டாயப்படுத்தியதாக டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அதிபரின் கருத்துக்கள் தீர்க்கமான பேச்சுவார்த்தை தந்திரங்கள் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

அவரது அச்சுறுத்தல்களில், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்குச் சமமான செயல்கள் போன்ற பல விஷயங்கள் இடம்பெற்றிருந்தன.

இரானின் நிபந்தனைகள் என்ன?

இரான் ஆட்சி வீழாமல் இருப்பதும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பும், இன்னும் அவர்களால் ஏவுகணைகளையும் டிரோன்களையும் ஏவ முடிவதும், ஹோர்மூஸ் நீரிணையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும்தான், அமெரிக்காவை அவர்களின் பத்து அம்சத் திட்டத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தக் கட்டாயப்படுத்தியதாக இரானியர்கள் நம்புகிறார்கள்.

அமெரிக்கா ஏற்றுக்கொள்வதற்கு எவ்வளவு கடினமான விஷயங்கள் அதில் இருக்கிறதோ, அதே அளவு அமெரிக்காவின் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்வது இரானுக்கும் கடினமாக இருக்கும்.

அவற்றில் ஹோர்மூஸ் நீரிணை மீதான இரானின் ராணுவக் கட்டுப்பாட்டை அங்கீகரிப்பது, இழப்பீடு கோருவது, தடைகளை நீக்குவது மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பது போன்றவை அடங்கும்.

இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு இஸ்லாமாபாத்திற்குச் செல்லும் போது பாகிஸ்தானியர்களால் ஒரு நிலையான ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியுமா இல்லையா என்பது ஒருபுறம் இருக்க, இந்தப் போரும் அதன் விளைவுகளும் மத்திய கிழக்கை மறுசீரமைத்து வருகின்றன.

அதிபர் டொனால்ட் டிரம்பும் பிரதமர் நெதன்யாகுவும் இரான் மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்டபோது, இரானில் ஆட்சி மாற்றம் வரப்போகிறது என்று கூறினார்கள்.

மூத்த இரானிய தலைவர்களின் கொலையை ஒரு புதிய ஆட்சியின் வருகையாக டொனால்ட் டிரம்ப் சித்தரிக்க முயன்ற போதிலும், அது நடக்கவில்லை.

இரான் அரசு வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த நாட்டுக்குள்ளேயே இருக்கும் ஆட்சியின் எதிர்ப்பாளர்களுக்கு, இந்தப் போர் முடிவுக்கு வரும் விதம் நிம்மதியைத் தராது.

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க…

அமெரிக்காவும் இஸ்ரேலும் வீழ்ந்துவிடும் என்று கூறிய ஓர் ஆட்சி, இப்போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட போகிறது.

இரான் தனது நிலையை வலுப்படுத்தவே பார்க்கும். சில வாரங்களுக்கு முன்புதான் டொனால்ட் டிரம்ப் அந்த ஆட்சி நிபந்தனையற்ற முறையில் சரணடைய வேண்டும் என்று கூறியிருந்தார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீதான போரை மீண்டும் தொடங்கியபோது முன்னேற்றம் அடைந்து கொண்டிருந்த ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் இருந்து இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள் எவ்வாறு வேறுபடும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஜெனீவாவில், அவர்கள் அணுசக்தி தொடர்பான ஒரு புதிய ஒப்பந்தத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர், அதில் அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும் இரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பு பற்றியும் விவாதிக்கப்பட்டது.

3 மாற்றங்கள்

இஸ்லாமாபாத்தில் மற்றொரு விஷயமும் முதன்மையாக இருக்கும். அது ஹோர்மூஸ் நீரிணை.

இது இரானுக்கு ஒரு புதிய தற்காப்பு சக்தியாக மாறியுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் மீண்டும் போருக்குச் சென்றால், அதை எளிதாகத் தடுத்து உலகப் பொருளாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதை இரான் நிரூபித்துள்ளது.

பிப்ரவரி 28-க்கு முன், சர்வதேச கப்பல்கள் அந்த நீரிணையைத் தடையின்றி கடக்க முடிந்தது.

இப்போது போர்நிறுத்தத்தின் போது, கப்பல்கள் இரானிய ராணுவத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும் வரை, அவற்றை மீண்டும் அனுமதிக்கப்போவதாக இரான் கூறுகிறது.

அந்த நடைமுறை தொடர வேண்டும் என்று அது விரும்பும், மேலும் சூயஸ் கால்வாயைக் கடக்கச் செலுத்துவது போல, கப்பல் நிறுவனங்களிடம் கட்டணம் கேட்கவும் வாய்ப்புள்ளது.

இந்த போர்நிறுத்தத்திற்குக் காரணமான ராஜீய நடவடிக்கைகளில் இஸ்ரேல் ஒரு அங்கமாக இருக்கவில்லை.

இஸ்லாமியக் குடியரசிற்கு (இரான்) இன்னும் கூடுதல் சேதத்தை ஏற்படுத்தவே நெதன்யாகு விரும்பினார். இஸ்ரேலில் இது தேர்தல் ஆண்டு என்பதால், எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லாபிட் உள்ளிட்ட அவரது அரசியல் எதிரிகள், இஸ்ரேலின் பாதுகாப்பில் அவர் சமரசம் செய்து கொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இரானுக்கு எதிராக அவர்கள் பெற்ற தந்திரோபாய வெற்றிகள், ஒரு பெரிய உத்தி ரீதியான முன்னேற்றமாக மாறாது என்ற சாத்தியக்கூறால் அவர்கள் கவலையடைந்துள்ளனர்.

போர் நிறுத்தத்திற்கு முந்தைய சூழலில் சீனா ஒரு முக்கியப் பங்காற்றியது, இது இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகளிலும் அதற்கு வலுவான செல்வாக்கு இருக்கும் என்பதைக் குறிக்கிறது. இது மத்திய கிழக்கில் சீனாவின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும்.

டொனால்ட் டிரம்பின் பேச்சும் பல விளைவுகளை ஏற்படுத்தும். இது அதன் கூட்டாளிகளுடனான உறவை, குறிப்பாக நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளுடனான உறவைப் பாதித்துள்ளது. பிரிட்டன் பிரதமரை அவர் விமர்சித்ததும் பிரிட்டன் கடற்படையை அவர் கேலி செய்ததையும் பிரிட்டன் அரசியல்வாதிகள் மறப்பது கடினம்.

வளைகுடா அரபு நாடுகள் அமெரிக்காவுடனான உறவை முறித்துக் கொள்ளாது, ஆனால் அமெரிக்காவுடனான தங்களின் பாதுகாப்பு உறவுகளை அவர்கள் மறுபரிசீலனை செய்வார்கள்.

மேலும் ஒரு முழு நாகரிகத்தின் மீதான இனப்படுகொலைத் தாக்குதல் உட்பட சட்டம் மற்றும் ஒழுக்கம் குறித்த டொனால்ட் டிரம்பின் அணுகுமுறை பற்றி உலகம் முழுவதும் ஆழமான மற்றும் கவலையளிக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link