தமிழகத் தேர்தல் களம் பரபரப்பாகி இருக்கும் நிலையில் அஜித் ரசிகர்கள் வாக்கு வங்கியை குறிவைக்கும் அரசியல் கட்சிகளால் தற்போது மேலும் தீவிரமடைந்து உள்ளது.
அதிமுகவின் அஜித் ரசிகர்கள் நோக்கிய நகர்வு
கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல் புள்ளியும், அதிமுகவின் மூத்த தலைவருமான எஸ்.பி. வேலுமணி, தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் அஜித் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். குறிப்பாக, முதன்முறை வாக்களிக்கும் இளைஞர்கள் மத்தியில் அஜித் ரசிகர் மன்றங்களுக்கு இருக்கும் செல்வாக்கை உணர்ந்தே இந்த முன்னெடுப்பு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், புதிதாக அரசியலில் நுழைந்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரு வாக்கு கூட சிதறிவிடக் கூடாது என்பதில் வேலுமணி உறுதியாக இருந்தார்.
மற்ற கட்சிகளின் அணுகுமுறை
அதிமுக மட்டுமல்லாது, பாஜக மற்றும் திமுக போன்ற கட்சிகளும் அஜித் ரசிகர்களைக் கவரத் தவறுவதில்லை. நடிகர் அஜித் கார் பந்தயங்களில் பங்கேற்கும் போதும் அல்லது அதில் வெற்றி பெறும் போதும் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் அவருக்குத் தவறாமல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவருக்குப் பத்ம விருது வழங்கப்பட்ட போதும் பாஜகவினர் அதனைப் பெருமிதத்துடன் கொண்டாடினர். மறுபுறம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அஜித்தின் விளையாட்டுத் துறை சார்ந்த முயற்சிகளுக்குத் தனது ஆதரவைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். அஜித் சாலையில் நடந்தால் தமிழ்நாடே பின்னால் நிற்கும் என்று காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை இன்று கூறினார். இது போன்ற நடவடிக்கைகள் மூலம் அஜித்தின் ரசிகர் மன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்கத் திராவிடக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் போட்டி போடுகின்றன.
தவெகவின் ‘தல – தளபதி’ வியூகம்
அரசியல் களத்தில் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளும் தொண்டர்களும் இந்தப் போட்டியை நன்கு உணர்ந்துள்ளனர். சில தவெக பொதுக்கூட்டங்களில் ‘தல ரசிகன், தளபதி தொண்டன்’ என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்கள் அதிகம் காணப்படுகின்றன. அதாவது, திரையில் அஜித்தை விரும்பினாலும், அரசியலில் விஜய்யைப் பின்பற்றுவோம் என்ற பிம்பத்தை அவர்கள் முன்னிறுத்துகின்றனர். நடிகர் விஜய்யும் தனது கூட்டங்களில் அஜித்துடனான நட்பைப் பலமுறை நினைவு கூர்ந்துள்ளார். கடந்த 2025 செப்டம்பரில் நாமக்கல்லில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், தானும் அஜித்தும் இணைந்து இருக்கும் புகைப்படத்தில் விஜய் கையெழுத்திட்டது சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்களால் வைரல் ஆக்கப்பட்டது.
இளைஞர் சக்தி
தமிழகத்தைப் பொறுத்தவரை சினிமா பிம்பங்களுக்குப் பின்னால் இருக்கும் இளைஞர் சக்தியைத் திரட்டுவது எப்போதும் ஒரு வெற்றிகரமான அரசியல் பார்முலாவாக இருந்து வருகிறது. 2026 தேர்தலிலும் இந்த ரசிகர்களின் வாக்குகள் எந்தப் பக்கம் சாய்கிறதோ, அதுவே தமிழகத்தின் அடுத்த முதலமைச்சரைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
