கொல்கத்தா,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா, லக்னோ அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. பின் ஆலன் 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து களமிற்கிய ரகுவன்ஷி, ரஹானேவுடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தது. ரஹானே 41 ரன்களும், ரகுவன்ஷி 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரிங்கு சிங் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் ரோவ்மேன் பவல் மற்றும் கிரீனின் அதிரடி ஆட்டத்தின் மூலம் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. கிரீன் 32 ரன்களும், பவல் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் நின்றனர். இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி பேட்டிங் செய்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மிட்சேல் மார்ஷ் 15 ரன்களிலும், மார்க்ரம் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டர் ரிஷப் பண்ட் 10 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். ஆயுஷ் படோனி சற்று நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் லக்னோ அணி தடுமாறியது. இந்நிலையில், இறுதி ஓவர்களில் முகுல் சவுத்ரி அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 54 ரன்கள் விளாசினார். கடையில் லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது.
