ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான்-பெங்களூரு அணிகள் இன்று மோதல்

திஸ்பூர்,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக் கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

இதில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

ராஜஸ்தான் அணி முதலாவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையையும், அடுத்த ஆட்டங்களில் 6 ரன் வித்தியாசத்தில் குஜராத்தையும், 27 ரன் வித்தியாசத்தில் மும்பையையும் அடுத்தடுத்து வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

பெங்களூரு அணி தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் 43 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது. இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பெங்களூரு 17 ஆட்டத்திலும், ராஜஸ்தான் 14 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது.

கவுகாத்தியில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link