வருகின்ற 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வன்னியர்களின் வாக்குகளை கவருவதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. பிளவுபட்டு நிற்கும் பாமகவால் அதிமுகவிற்கு முழுமையான பயன் கிடைக்குமா? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
வடக்கில் வன்னியர்களின் செல்வாக்கு
இவை அனைத்தையும் கவனித்த ஆளுங்கட்சியான திமுக, அனைத்து சமூக வாக்குகளையும் கவர வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் வன்னியர்களின் வாக்கு வங்கி, பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளது. இதை ஈர்க்க வேண்டிய கட்டாயம் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது. கடந்த 2021 தேர்தல் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியானது திமுக கூட்டணியில் இருந்தது. எனவே வன்னியர்களின் முகமாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு பலம் சேர்ந்தது.
திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?
வெளியேறிய தவாக வேல்முருகன்
ஆனால் இம்முறை தங்களது 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதற்கு திமுக முக்கியத்துவம் தரவில்லை என்றும், தங்களுக்கே அறிவுரை சொல்லும் அளவிற்கு வந்துவிட்டாயோ என்றும் பெரிய அண்ணன் மனப்பான்மையில் தங்களை தூக்கி எறிந்துவிட்டதாக வேல்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதன் விளைவாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனது தலைமையில் தனி அணியை கட்டமைத்து வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளார். எனவே திமுகவின் மூத்த தலைவர்களை தாண்டி வன்னியர்கள் அடையாளத்துடன் பிற கட்சிகளோ, அமைப்புகளோ, தலைவர்களோ இந்த கூட்டணியில் இடம்பெறவில்லை.
ராமதாஸ்க்கு நோ சொன்ன ஸ்டாலின்
இதற்கிடையில் திமுக கூட்டணிக்கு வருவதற்கு ராமதாஸ் பலகட்ட முயற்சிகள் எடுத்தார். ஆனால் ஏற்கனவே 10க்கும் கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றிருப்பதால் சீட் ஒதுக்கீடு நெருக்கடி ஏற்படும் என திமுக தலைமை தவிர்த்துவிட்டது. மேலும் விசிக, பாமக இடையிலான மோதல் போக்கு பெரிதும் கவனிக்க வேண்டியதாக மாறியது. ராமதாஸ் வந்தால் திருமாவளவன் வெளியேறி விடுவார் என்ற விஷயத்தை மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை. இதனால் அவர் இல்லாமலேயே திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு களத்திற்கு சென்றுவிட்டது.
| வியூகம் | மு.க.ஸ்டாலின் நகர்வு |
| 1 | விழுப்புரத்தில் பரப்புரை மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், ராமதாஸை புகழ்ந்து பேசி ஆச்சரியப்படுத்தினார். மருத்துவர் ஐயா ராமதாஸிற்கு இன்று பலர் நம்பிக்கை துரோகம் செய்திருக்கலாம். ஆனால் தலைவர் கலைஞரும், நானும், திராவிட முன்னேற்றக் கழகமும் அவரை எப்போதும் சமூக நீதிப் போராளியாக தான் பார்க்கிறோம், மதிக்கிறோம் என்று கூறினார். |
| 2 | நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வன்னியர் கூட்டமைப்பின் தலைவரும், அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவனத் தலைவருமான சி.என்.இராமமூர்த்தி அறிவாலயத்தில் சந்தித்து தங்கள் ஆதரவை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு அளித்தனர். |
| 3 | வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ.குரு அவர்களின் மகள் குரு.விருதாம்பிகை மற்றும் குரு.விருதாம்பிகை அவர்களின் கணவரும், ஜெ.குரு அவர்களின் மருமகனுமான காடுவெட்டி மனோஜ், பொருளாளர் ஆர்.பாலமுருகன், இணைச் செயலாளர் குடியாத்தம் பிரேம்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து, ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவை அளித்தனர். |
விஜய் வருகையால் சிதறும் வாக்குகள்
இவ்வாறு வன்னியர்களின் வாக்குகளை தக்க வைக்க பல்வேறு வழிகளில் திமுக காய் நகர்த்தி வருவதை பார்க்க முடிகிறது. வன்னியர்கள் என்றாலே தேர்தல் அரசியலில் வட தமிழகத்தின் மீது தான் கவனம் திரும்பும். இங்கு தான் கணிசமான எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இந்த பகுதி கடந்த சில தேர்தல்களாக திமுகவிற்கு பலமாக திகழ்ந்து வருகிறது.
இம்முறை விஜய்யின் வருகையால் சமூக ரீதியிலான கணக்குகள் மாறும் என்பதை திமுக அறிந்து வைத்திருக்கிறது. இதுதொடர்பான சர்வே முடிவுகளையும் தொடர்ச்சியாக எடுத்து வருகின்றனர். எனவே வன்னியர் வாக்கு வங்கியில் ஏற்படும் பாதிப்பை ஏதேனும் ஒரு வகையில் அறிந்திருப்பதாக தெரிகிறது. இதன் விளைவாக தான், அந்த மக்களின் ஆதரவை பெறும் வகையில் திமுக தலைமையின் நகர்வுகளை பார்க்க முடிகிறது.
