அதிமுக கூட்டணியில் அமமுக
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் டிடிவி தினகரன். இதனால் இந்த தேர்தலில் அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லையென கருதப்பட்டது. ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது அமமுக. இதனையடுத்து என்டிஏ கூட்டணியில் 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் பரப்புரை
இந்நிலையில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சமீபத்தில் பரப்புரையை துவங்கினார் டிடிவி தினகரன். தற்போது தேனியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவரிடம், ஓபிஎஸ் பற்றி பேசுங்க அண்ணே என கூட்டத்தில் இருந்து குரல்கள் தொடர்ச்சியாக வந்தது. இதனால் கடுப்பான அவர் இருங்கய்யா. வீணா போனவங்க பற்றியெல்லாம் பேச சொல்றீங்க என பதில் கொடுத்தார். அதனைக்கேட்டு கூட்டத்தினர் கத்தி ஆரவாரம் செய்தனர்.
ஓபிஎஸ்ஸை விமர்சித்த டிடிவி தினகரன்
இதனையடுத்து குக்கர் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார் டிடிவி தினகரன். அதன்பின்னர் இறுதியாக யாரை பற்றியோ பேச சொன்னீங்களே என ஆரம்பித்த ஓ. பன்னீர்செல்வம் பற்றி பேசிய டிடிவி தினகரன், கட்சியால அட்ரஸ் கிடைச்சு. பதவிகள், எம்எல்ஏ, மத்திய மந்திரி பதவிகள் கொடுத்தோம். மூன்று முறை முதலமைச்சராக இருந்தார். ஆனால் இப்போ அவர் இப்படியொரு மோசமான செயலை செய்யலாமா? அதுபோன்று செய்தவர்களை இந்த தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
எடப்பாடி பழனிசாமி மறுப்பு
இவ்வாறு ஓபிஎஸ் குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளார் டிடிவி தினகரன். முன்னதாக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வந்த நிலையில் மீண்டும் அதிமுகவில் இணைவதற்கு ஓ. பன்னீர்செல்வம் முயற்சி செய்தார். ஆனால் டிடிவியை கூட்டணியில் இணைப்பதற்கு ஒப்புக்கொண்ட இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை இணைத்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து தனது மகன் மற்றும் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்து அதிர்ச்சி கொடுத்தார் ஓபிஎஸ்.
தீவிர பரப்புரையில் ஓ. பன்னீர்செல்வம்
இந்நிலையில் அவர் திமுக சார்பில் போடி தொகுதிக்கு வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் ஓபிஎஸ், அரசியலில் துரோகம் என்றால் அது இபிஎஸ் தான். அவர் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்றத்தில் இருந்து எந்த தேர்தலிலும் வெற்றி பெற்றது இல்லை. தன்னை முதலமைச்சராக நியமித்த அம்மையாரையே கட்சியில் இருந்து விலக்கி வைத்தார் என எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் ஓபிஎஸ்.
சசிகலாவின் வியூகம்
அதே போல் சசிகலா அஇபுதமமுக கட்சி ஆரம்பித்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். ராமதாஸ் உடன் கூட்டணி அமைத்து அவருடைய கட்சி போட்டியிடவுள்ளது. இதனிடையில் தற்போது பரப்புரையில் ஈடுபட்டு வரும் சசிகலாவும், இபிஎஸ்ஸை துரோகி என விமர்சித்து பேசி வருகிறார். கட்சி, ஆட்சியை காப்பாற்ற யாருடைய முதல்வராக நியமித்தேனோ, அவராலே கட்சியை விட்டு நீக்கப்பட்டேன் என விமர்சனங்களை முன்வைத்து கொண்டிருக்கிறார். இது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
