மதுரையில் இருந்து காரைக்குடி செல்லும் தவெக தலைவர் விஜய் பிரச்சார வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது. அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க மாநிலம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.
உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பணம் அல்லது பரிசுப் பொருட்கள், நகைகள் உள்ளிட்டவை கொண்டு செல்லப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து வருகின்றனர். பின்னர் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அந்த பணம் அல்லது பொருட்கள் மீண்டும் வழங்கப்படும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.
அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்களின் வாகனங்களிலும் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் இருந்து காரைக்குடி செல்லும் தவெக தலைவர் விஜய் பிரச்சார வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
