சென்னை,
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா மொரார்ஜி தேசாயின் நினைவு தினம் இன்று. மும்பை மாகாண உள்துறை மந்திரியாகவும், மும்பை மாகாண முதல்-மந்திரியாகவும் பதவி வகித்தவர். இந்திராகாந்தி அம்மையார் 1975 ஆம் ஆண்டு கொண்டு வந்த நெருக்கடி நிலையை தீவிரமாக எதிர்த்தவர்.
1975 ஆம் ஆண்டு இந்திராகாந்தி அம்மையார் கொண்டு வந்த நெருக்கடி நிலையை எதிர்த்து களம் கண்டு பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து பாரதிய ஜன சங்கத்தின் ஆதரவோடு சுதந்திர பாரதத்தில் 1977 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் அல்லாத ஒரு அரசை முதன் முதலாக நிறுவி காங்கிரஸ் அல்லாத முதல் பாரத பிரதமராகவும், பாரதத்தின் நான்காவது பிரதமராகவும் பதவி வகித்தவர்.
அரசியலிலும், ஆட்சி நிர்வாகத்திலும் பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர்.
பாரதிய ஜனதா கட்சியின் பீஷ்ம பிதாமகர் முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் மீதும், ரத யாத்திரை நாயகர் இரும்பு மனிதர் அத்வானி மீதும் பெருமதிப்பு கொண்டிருந்தவர்.
அப்பழுக்கற்ற நேர்மையான அரசியல் தலைவரான மொரார்ஜி தேசாயின் நினைவு தினத்தில் அவரது சேவைகளையும், சாதனைகளையும் நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
