செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் அமைந்துள்ளது, மீனாட்சி அம்மன் சமேத திருவெண்காட்டீஸ்வரர் திருக்கோவில். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவிலில் திருவெண்காட்டீஸ்வரர் மூலவராகவும், உற்சவராகவும் திகழ்கிறார். தாயாராக மீனாட்சி அம்மன் விளங்குகிறார். இத்தல முருகப்பெருமானை அருணகிரிநாதர் திருப்புகழில் போற்றி புகழ்ந்துள்ளார்.
தல சிறப்பு
ஒரு காலத்தில் இப்பகுதி முழுவதும் மந்தாரை மரங்கள் நிறைந்து காணப்பட்டது. அந்த மரங்களில் வெண்மையான கொக்குகள் அமர்ந்து இளைப்பாறின. இதனால் அப்பகுதி பார்ப்பதற்கு வெண்மையான காடுபோல தோற்றமளித்தது. எனவே இப்பகுதியை ‘வெண்காடு’ என்று அழைத்தனர். இங்குள்ள சிவபெருமானுக்கு ‘வெண்காட்டு ஈஸ்வரன்’ என்ற பெயரும் வந்தது.
இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை, ‘மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலம் அமர்ந்த பெருமானே’ என்று அருணகிரிநாதர் திருப்புகழில் போற்றி பாடியுள்ளார். இக்கோவிலில் கிட்டதட்ட 27 கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டு சான்றுகளின்படி இவ்வூர், மதுராந்தக சதுர்வேதி மங்கலம், ஜெயம்கொண்ட சோழ மண்டலத்து களத்தூர் கோட்டம், தனியூர் என குறிப்பிடப்பட்டுள்ளது. சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்களால் இக்கோவிலில் திருப்பணிகள் நடத்தப்பட்டதையும், கோவிலுக்கு வழங்கப்பட்ட தானங்கள் பற்றியும் அறியமுடிகிறது.
கோவில் அமைப்பு
இந்த ஆலயம் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கோவில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அழகுற காட்சி அளிக்கிறது. ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி பகவான் காணப்படுகிறார். அதைத் தாண்டி சென்றால் வெளிச்சுற்றில் மீனாட்சி அம்மன், பாண்டீஸ்வரர் ஆகியோரை தரிசிக்கலாம். பாண்டிய மன்னன் ஒருவர், தனது தோல் நோய் குணமானதற்கு நன்றிக்கடனாக பாண்டீஸ்வரரை பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது.
கருவறையில் சிவபெருமான், வெண்காட்டீஸ்வரர் என்ற திருநாமத்துடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவர் திருவெண்காடுடைய மகாதேவர், திருவெண்காடுடைய நாயனார், வேதாரண்யேஸ்வரர், சுவேதாரண்யேஸ்வரர் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
கருவறை மண்டபத்தில் நடராஜர், சிவகாமி அம்மையார் மற்றும் பல உற்சவ மூர்த்திகள் காட்சி தருகின்றனர். உள்சுற்றில் நால்வர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி – தெய்வானை சமேத முருகன், பிரம்மன், சண்டிகேஸ்வரர், துர்க்கை, திருமால் ஆகியோர் உள்ளனர்.
இங்கு கால பைரவர், உன்மத்த பைரவர், அசிதாங்க பைரவர், சுவர்ண ஆகர்ஷண பைரவர் என நான்கு பைரவர்கள் காணப்படுவது சிறப்பாகும். இக்கோவிலின் தல விருட்சமாக வெண்கொக்கு மந்தாரை உள்ளது. தல தீர்த்தமாக விடகர தீர்த்தம் காணப்படுகிறது.
திருவிழாக்கள்
இந்த ஆலயத்தில் மகாசிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, ஆருத்ரா தரிசனம், தைப்பூசம், மாசிமகம், பிரதோஷம் போன்ற விழாக்கள் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன. தோல் நோய் உள்ளவர்கள், சொத்துப் பிரச்சினை உள்ளவர்கள் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டால் பிரச்சினைகளை நீங்கி ஆனந்த வாழ்வு வாழலாம் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கோவில், காலை 7.30 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பஸ் நிலையத்துக்கு அருகிலேயே திருவெண்காட்டீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
