சென்னை,
விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் பிரச்சினை காரணமாக நீதிமன்றம் வரை சென்று தள்ளிப்போனது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவடைந்தவுடன் மே இரண்டாவது வாரத்தில் ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தவெக தலைவர் விஜய், தனது ‘ஜன நாயகன்’ படத்திற்கு கூட்டு சேர்ந்து பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள் என குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த சூழலில், நேற்று மாலை ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிநேரம் கொண்ட முழு படமும் இணையத்தில் வெளியானது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
இது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தள பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
3 மணி நேரம் 2 நிமிடங்கள் ஓடும் ஜனநாயகன் படத்தை ஆன்லைனில் யாரோ திருடி வெளியிட்டுள்ளார்கள்.
அப்படத்தின் தயாரிப்பாளர் பார்வையில், இயக்குநரின் பார்வையில், இதில் பங்கேற்றிருப்பதால் துளிர்க்கக் காத்திருக்கும் பலரின் கனவுகளின் பார்வையில் இதைப் பார்க்க விரும்புகிறேன்.
சமீபத்தில் எனது நிறுவனத்தின் மூலமாக வெளியான சல்லியர்கள் படம் திரையரங்குகளில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட வலி, இழப்பு இவற்றை சொல்ல முடியாது. அதன்பிறகு அதை அதிகாரப்பூர்வ தளங்களில் வெளியிட்டு சமன் செய்தோம். ஆனால் ஜனநாயகன் மிகப் பெரிய முதலீட்டுப் படம். அது திரையரங்குகளுக்கு குறித்த நேரத்தில் வராதிருந்ததே மிகப்பெரிய இழப்பை தயாரிப்பாளருக்கு ஏற்படுத்தியிருக்கும். அதையும் தாண்டி இப்போது திருட்டுத்தனமாக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்கள் என்றால் ஒட்டுமொத்த இழப்பையும் தயாரிப்பாளர் தாங்க வேண்டும் என்பது வேதனை.
இழப்பு மேல் இழப்பு. இயக்குநரின் உழைப்பு பலரின் கனவுகள் சிதைக்கப்பட்டிருக்கிறது. இது திரையுலகில் நடக்கக்கூடாத குற்றச் செயல். யாரோ ஒருவரின் உழைப்பு காசு பணத்தில் திருடுபவர்கள் சப்புக்கொட்டிக் கொள்வதை விடவே கூடாது.
யார் இந்த வேலையை செய்தது எனக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். திரையுலகிலிருந்து முற்றிலுமாக அகற்றப்பட வேண்டிய திருட்டுக் களைகள். உழைப்பைச் சுரண்டிக் கொழுப்பவர்கள் இனி அச் செயலை செய்யக்கூடாது என்ற எண்ணம் வருமளவிற்கு நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
திரையுலகினர் ஒற்றுமையுடன் இணைந்து இந்த இழிசெயலை செய்தவர்களைக் கண்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
