மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி,

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரான நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக செயல்பட்டு வந்த நிலையில், சமீபத்தில், மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிட முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையில் இறங்கினார். இதனால், முதல்-மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்ய இருந்தார். இதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. அவர் பதவி விலகக்கூடாது என தொண்டர்கள் வலியுறுத்திய நிலையில், எம்.எல்.சி. பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலகினார்.

இந்த நிலையில் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார், இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது அறையில் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மத்திய மந்திரிகள் ஜே.பி. நட்டா, நிர்மலா சீதாராமன், அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் முன்னிலையில் நிதிஷ்குமார் இந்தியில் பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நிதிஷ்குமார் நாட்டின் மிகவும் அனுபவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவர். நல்லாட்சிக்கான அவரது அர்ப்பணிப்பு எல்லா இடங்களிலும் பாராட்டப்பட்டுள்ளது. பீகாரின் வளர்ச்சியில் அவர் அழியாத பங்களிப்பை செய்துள்ளார்.

அவரை மீண்டும் பாராளுமன்றத்தில் பார்க்கும் அனுபவம் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். பாராளுமன்ற உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும் அவர் பல ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார். அவரது நீண்ட அரசியல் அனுபவத்தால் பாராளுமன்றத்தின் மரியாதை மேலும் உயரும் என்று எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

Source link