இந்த ஆட்டத்தை என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்: முகுல் சவுத்ரி நெகிழ்ச்சி

கொல்கத்தா,

ஐபிஎல் தொடரில் நேற்று கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணியே வெற்றிபெறும் என்ற நிலையில் இருந்தபோது, தனி ஆளாக போராடி ஆட்டத்தை திசைதிருப்பியவர் முகுல் சவுத்ரி. அவர் 27 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து லக்னோ அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். இவரது ஆட்டத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், முகுல் சவுத்ரி இது தொடர்பாக கூறியதாவது,

கடவுள் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். அழுத்தம் இருக்கலாம், ஆனால் இது எனக்கென ஒரு பெயரை நிலைநாட்டிக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பும் கூட. கடைசி வரை பேட் செய்து, என்ன நடக்கிறது என்று பார்ப்பதே என் நோக்கமாக இருந்தது.

கடந்த போட்டியில் நான் ஆடிய 4-5 பந்துகளில் என்னால் சரியாக ஆட முடியவில்லை. அப்போது ரிஷப் பண்ட் என்னிடம் வந்து, ‘அதிகமாக யோசிக்காதே, செயல்முறையைப் பின்பற்று. நீ அதிகமாக யோசித்தால், அழுத்தம் ஏற்படும். நாங்கள் அனைவரும் உன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்’ என்று கூறினார். அது எனக்கு ஊக்கமளித்தது.

இந்த ஆட்டத்தை என் தந்தைக்கும், எம்.எஸ். தோனிக்கும் சமர்ப்பிக்கிறேன். எம்.எஸ். களமிறங்கி அந்த நிலையில் இருந்து ஆட்டங்களை முடித்து வைப்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். நானும் அதே நிலையில் விளையாடி, அவரைப் போலவே செய்ய முயற்சிக்கிறேன். என தெரிவித்துள்ளார்.

Source link