நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய், ‘ஜன நாயகன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை வாரிய குழுவினர், மதம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரை செய்தனர்.
நீண்ட போராட்டத்திற்கு பின் ‘ஜன நாயகன்’ படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பியது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தவெக தலைவர் விஜய், தனது ‘ஜன நாயகன்’ படத்திற்கு கூட்டு சேர்ந்து பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள் என குற்றஞ்சாட்டியிருந்தார்.
நேற்று மாலை ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது. இன்று அதிகாலை 3 மணிநேரம் கொண்ட முழு படமும் இணையத்தில் வெளியானதாக கூறப்படுகிறது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
இயக்குநர் எச். வினோத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஒவ்வொரு காட்சியும் ஒருவரின் கனவைச் சுமந்துள்ளது. வெளியீட்டுக்கு முன்பே அது கசிவது மிகப்பெரிய வலியைத் தருகிறது. தயவுசெய்து அதனைப் பகிராமல் ஆதரவளியுங்கள்” என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லீக் செய்துள்ளதாக விஜய் ரசிகர்களும் படத்தின் தயாரிப்பு தரப்பும் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளநிலையில், இணையத்தில் வெளியான ஜன நாயகன் படத்தை நீக்கும் முயற்சியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் ராக்கர்ஸ் அரசால் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், பல்வேறு பெயர்களில் வலைதளங்களை தொடங்கி திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.அவற்றில் ஒரு வலைதளமான தமிழ் எம்வி-யில், “விஜய்யைச் சுற்றி நிலவும் அரசியல் சார்ந்த விவகாரங்களை நாங்கள் நன்கு அறிவோம். எங்கள் நெறிமுறைகளின்படி, ஒரு திரைப்படம் திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியான பின்னரே நாங்கள் அதனை வெளியிடுவோம். எனவே, இப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பாக இங்கு பதிவேற்றம் செய்யப்படாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
