குறிப்பாக திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோர் திமுக ஒதுக்கிய தொகுதிகள் போதாது என அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்பட்டது. இதையெல்லாம் வைத்து திமுக அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளை அடிமையாக்கி வருகின்றனர் என விமர்சித்தனர் அதிமுகவினர். ஆனால் நாங்கள் யாரையும் அடிமையாக்கவில்லை, அதிமுக தான் பாஜகவின் அடிமையாக உள்ளது என்கின்றனர் திமுகவினர்.
நயினார் நாகேந்திரன் பதிலடி
இவ்வாறு மாறி மாறி விமர்சித்து வரும் நிலையில் தற்போது முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழகத்தில் அதிமுக முதுகில் ஏறி பாஜக சவாரி செய்து வருவதாக கூறி விமர்சித்துள்ளார். இந்த விமர்சனத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்பதிலடி கொடுத்திருக்கின்றார். இந்த விமர்சனம் குறித்து அவர் பேசியது, முதலமைச்சர் இதையெல்லாம் பயத்தில் தான் பேசிக்கொண்டு இருக்கின்றார். எங்கள் கூட்டணியை பார்த்து கடும் பயத்தில் முதலமைச்சர் இருக்கின்றார்.
1999 ஆம் ஆண்டு திமுக யாருடன் கூட்டணி வைத்தார்கள் ? பாஜகவுடன் தானே கூட்டணி வைத்திருந்தார்கள் ? அப்போது மட்டும் பாஜக கூட்டணி இனித்தது ? இப்பொது கசக்கின்றதா ?இன்றும் திமுக ஒரு தேசிய கட்சியோடு தானே கூட்டணி வைத்திருக்கின்றனர். அப்படி கூட்டணி வைக்காமல் திமுக தனித்து போட்டியிட வேண்டியது தானே ? திமுக தனித்து போட்டியிட்டால் அனைத்து கட்சியினரும் தனித்து போட்டியிடலாம் என்கின்ற எண்ணத்தை முதலமைச்சர் உருவாக்குவாரா ? அதற்கு முதல்வருக்கு தைரியம் உள்ளதா ? என அடுக்கடுக்காக கேள்வி கேட்டார் நயினார் நாகேந்திரன்.
இவ்வாறு அதிமுகவுடன் கூட்டணி குறித்தான தமிழக முதலமைச்சரின் விமர்சனங்களுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்திருக்கின்றார். இதே கருத்தை தான் எதிர்க்கட்சித்தலைவர்எடப்பாடி பழனிசாமியும் தனது ஒவ்வொரு பரப்புரையிலும் கூறி வருகின்றார். தான் பரப்புரைக்கு செல்லும்போது 1999 ஆம் ஆண்டு திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது குறித்து தான் பேசி வருகின்றார் எடப்பாடி பழனிச்சாமி.
திமுக -பாஜக கூட்டணி
அதோடு மட்டுமல்லாமல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மற்றும் வாஜ்பாய் இருக்கும் புகைப்படத்தை காட்டியும் பேசி வருகின்றார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் இதற்கெல்லாம் முதலமைச்சர் ஏற்கனவே பதிலளித்து இருக்கின்றார். நாங்கள் பாஜகவுடன் கூட்டணி தான் வைத்தோம் கட்சியை அடகு வைக்கவில்லை என கூறியிருக்கின்றார். பாஜகவுடன் நாங்கள் கூட்டணி வைத்தபோதும் திமுக எங்களிடம் தான் இருந்தது.
ஆனால் தற்போது அதிமுகவின் நிலை என்ன ? என்று கேள்வி கேட்டார் முக ஸ்டாலின். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ,நான் தான் முதல்வர் வேட்பாளர், அதிமுக தலைமையில் தான் கூட்டணி என உரக்க கூறியிருக்கின்றார். இவ்வாறு கூட்டணி தொடர்பான விமர்சனங்கள் தொடர்ந்து போய்க்கொண்டு தான் இருக்கின்றது.ஆனால் கடந்தமுறை அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தனர். ஆனால் தேர்தல் முடிந்து முடிவு வெளியான பாஜகவுடன் கூட்டணி வைத்தது தவறு என்பது போல அதிமுக பேசினார்கள்.
கருத்து வேறுபாடுகள்
அதன்பிறகு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து நின்றனர். தற்போது மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்கின்றனர். அதோடு எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு கொண்ட டிடிவி தினகரன் இக்கூட்டணியில் தொடர்கிறார். இவ்வாறு கருத்து வேறுபாடு கொண்டவர்கள் அதையெல்லாம் மறந்து மீண்டும் கூட்டணியில் இணைந்திருக்கின்றனர்.
தேர்தல் முடிந்த பிறகும் இக்கூட்டணி தொடருமா ? அல்லது கடந்த முறையை போல இம்முறையும் கருத்து வேறுபாடுகள் உண்டாகுமா ? என்பது தான் பலரது கேள்வியாக இருக்கின்றது. மறுபக்கம் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் பல கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சொன்னாலும் கடந்த பல ஆண்டுகளாகவே அவர்களின் கூட்டணி தொடர்ந்துகொண்டு தான் வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
