அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து தொடுத்த போர் 40 நாட்கள் நீடித்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் சம்மதித்தது. இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கூறும்போது, ஈரான், இஸ்ரேல், வளைகுடா நாடுகள், லெபனான் என அனைத்து பகுதிகளிலும் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று தெரிவித்தார். ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்தது.
மேலும், லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.லெபனான் மீதான தாக்குதலுக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது.இதற்கிடையே அமெரிக்கா–ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நாளை பாகிஸ்தானில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், இந்த அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தாதவரை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஈரான் அரசின் பார்ஸ் செய்தி நிறுவனம் கூறியதாவது:அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் குழு பாகிஸ்தானை சென்றடைந்ததாக வெளியான தகவல் உண்மை இல்லை. லெபனானில் போர் நிறுத்தம் ஏற்படும் வரை, பாகிஸ்தானில் அமெரிக்கத் தரப்புடன் அமைதி பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க ஈரானுக்கு எந்த திட்டமும் இல்லை என்று தெரிவித்தது. அதேபோல் ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் கூறும்போது, லெபனானில் போர்நிறுத்தத்திற்கான தனது உறுதிமொழியை அமெரிக்கா நிறைவேற்றாத வரையிலும், இஸ்ரேல் தனது தாக்குதல்களை தொடரும் வரையிலும் பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தது.
இதற்கிடையே, ஈரான் குழுவுக்கு தலைமை தாங்கும் அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கூறும்போது, லெபனானில் போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்கான காலம் கடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் அளித்த 10 அம்சங்களில் லெபனானும் போர் நிறுத்தத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது; அதை மறுபரிசீலனை செய்ய முடியாது.
சண்டையை நிறுத்துவதில் ஏற்படும் எந்தவொரு தாமதமும் நிலைமையை மோசமாக்கும். லெபனான் மீது தாக்குதல் நிறுத்தம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் தெளிவாக கூறியுள்ளார் என்றார்.
