சென்னையில் மழை வெள்ளம்: ரீல்ஸ் எடுப்பதை ஓரங்கட்டிவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் – டிடிவி தினகரன் – ttv dhinakaran urges tvk govt to take action damage caused by rains chennai oct 2026

சென்னையில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மேலும் நகரின் பிரதான சாலைகள், வீடுகள், குடியிருப்பு பகுதிகள் என பல இடங்களில் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், தவெக அரசுக்கு கேள்வி எழுப்பி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டிடிவி தினகரன் அறிக்கை

ஒரு நாள் இரவு மழைக்கே வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை – அடுத்தடுத்த மழைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க என்ன செய்யப் போகிறது தவெக அரசு என கேள்வி எழுப்பிய அவர், சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த தொடர் கனமழையால் குடியிருப்புகளும் சாலைகளும் வெள்ளக்காடாக மாறியிருப்பதும், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதும் சென்னை மாநகராட்சி மற்றும் தவெக அரசின் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கேள்விக்குறியாக்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்ததை குறிப்பிட்ட அவர், மழைநீர் தேங்குவதைத் தடுக்கவும், தேங்கியிருக்கும் மழைநீர் தடையின்றி வெளியேறுவதை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கைகளை எடுக்காததன் விளைவாகவே, ஒருநாள் இரவு மழைக்கே சென்னை மாநகரமே முழுமையாகத் தத்தளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கண்காணிப்புப் பணிக்காக நியமித்ததோடு தன் கடமை முடிந்துவிட்டதாகக் கருதும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், களப்பணிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுமே பொதுமக்களை மழை பாதிப்புகளிலிருந்து காக்கும் என்பதை இனியாவது உணர வேண்டும்.

எனவே, மழைநீர் வடிகால் ஆய்வு என்ற பெயரில் கேமராக்கள் முன் தோன்றி ரீல்ஸ் எடுப்பதை ஓரங்கட்டிவிட்டு, களப்பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, மழைநீர் தேங்கும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அடுத்தடுத்த நாட்களில் எதிர்பார்க்கப்படும் பெருமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் முன்னெடுத்திட வேண்டும் என சென்னை மாநகராட்சியையும் தவெக அரசையும் வலியுறுத்துகிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source link