நாகப்பட்டினத்தில் தவெக நிர்வாகிக்கு சொந்தமான வீட்டில் 135 கிலோ எடையுள்ள ‘மெத்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தற்போது வெளியாகியுள்ள விசாரணைக் தகவல்கள் பல திடுக்கிடும் உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன.
போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், வட மாநிலங்களில் இருந்து ஆபத்தான வேதிப்பொருட்களையும் மூலப்பொருட்களையும் ரகசியமாக தமிழகத்திற்கு கொண்டு வந்து, நாகப்பட்டினத்தில் உள்ள வீட்டில் வைத்து இந்த போதைப்பொருளை தயாரித்து வந்தது அம்பலமாகியுள்ளது. நாகை மாவட்டம் மட்டுமின்றி, வேறு சில கடலோர மாவட்டங்கள் வழியாகவும் இந்த போதைப்பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டதாக விசாரணையில் தகவல்கள் கசிந்துள்ளன.
இலங்கையை ஒரு முக்கிய இடைக்கால மையமாக (Transit point) பயன்படுத்தி, அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் சர்வதேச அளவில் இந்த மெத்தபெட்டமைன் கடத்தப்பட்டுள்ளதாக திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நெட்வொர்க்கின் வேர்கள் மிகவும் ஆழமானவை என்பதால், இதன் பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் மற்றும் சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த பலரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி நடவடிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடையே தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
