தமிழ்நாட்டில் டகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பொதுவாக பருவமழை என்றாலே பெரிதும் பாதிக்கப்படுவது சென்னை தான். இதனால், மழைக்காலம் தொடங்கிவிட்டதால் மக்கள் ஒருவித பதற்றநிலையிலேயே காணப்படுகின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை முதல் சென்னையில் விடிய விடிய விடி மற்றும் மின்னலுடன் கூடிய அதிக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நகரின் பல முக்கிய சாலைகளில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழ்நாட்டில் தீவிரமடையும் கனமழை
மேலும் பல்வேறு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்துள்ளது கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளது. குறிப்பாக பாரி முனையில் அதிகபட்சமாக 36 சென்டிமீட்டர் கனமழையும் திருவெற்றியூரில் 33 cm மழையும், சாத்தங்காடு பகுதியில் 25 சென்டிமீட்டர், ராயபுரம், தண்டையார்பேட்டை ,எழும்பூர் ,சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆலந்தூர் உட்பட சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் 10 சென்டிமீட்டருக்கும் அதிகமான கனமழை பதிவாகியுள்ளது.சென்னையில் ஒரே நாளில் 30 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மேலும் பலத்த மழை பெய்யுமா என்ற அச்சமும் அவர்களிடம் நிலவி வருகிறது. ஏற்கெனவே எல்நினோ தாக்கத்தின் காரணமாக மழை குறையவும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது.
இந்த சூழலில் சென்னையில் திடீர் மழைக்கு காரணம் என்ன? பல பகுதிகளில் ஒரே இரவில் 30 க்கும் சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பொழிந்ததால், இது ‘மேகவெடிப்பு’காரணமாக நிகழ்ந்ததா என்ற கேள்வி பொதுமக்கள் இடையே எழுந்தது.
தற்போது இந்த நிகழ்வு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
மேகவெடிப்பு நிகழ்ந்ததா?
-இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வரையறைப்படி, 20 முதல் 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்குள் ஒரு மணி நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் (10 செ.மீ) அதிகமாக மழை பதிவானால் மட்டுமே அது ‘மேகவெடிப்பு’ எனக் கருதப்படுகிறது.
-பொதுவாக இந்தியாவில் 20 முதல் 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்குள், ஒரு மணி நேரத்திற்குள் 100 மில்லிமீட்டர் (10 செ.மீ) அல்லது அதற்கு மேல் மழை பெய்தால் அது மேகவெடிப்பு என வரையறுக்கப்படுகிறது.
-ஆனால், சென்னையில் பெய்த மழை மேகவெடிப்பு அல்ல என்று வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்தியுள்ளது. வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேச பகுதிகளில் நிலவிய மேலடுக்கு சுழற்சியே (4.5 கி.மீ முதல் 5.8 கி.மீ உயரம் வரை) இந்த கனமழைக்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கான காரணங்கள்
-இந்தச் சுழற்சி வடகடலோரத் தமிழகப் பகுதியில் காற்றை ஒன்றிணையச் செய்து, அதிகளவு ஈரப்பதத்தை நிலப்பரப்பிற்கு கொண்டு வர தூண்டியது.
-வளிமண்டலத்தில் நிலவிய சாதகமான சூழலால் ஆழமான வெப்பச்சலன மேகங்கள் உருவாகி தீவிரமடைந்தன.
-ஒரு குறிப்பிட்ட சிறு பகுதியில் மட்டும் ஏற்பட்ட மேகவெடிப்பை விட, மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலன மேகங்களின் செயல்பாட்டினாலேயே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவில் தீவிர மழை பெய்துள்ளது.
-குறுகிய காலத்தில் அதிகளவில் பெய்யும் இத்தகைய தீவிர மழை, நகர்ப்புறங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நீர் தேங்குதலை ஏற்படுத்தும் என்பதால், பொதுமக்கள் அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளைப் பின்பற்றி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
