பிரேமலதா விஜயகாந்த் காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்க பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், விதிமீறல்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கையில் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பணத்தை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், விதிகளை மீறி பணம் அல்லது பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்க, பறக்கும் படை அதிகாரிகள் அவ்வப்போது வாகனங்களை மறித்து சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் தலைவர்களின் வாகனங்களுக்கும் விதிவிலக்கு இல்லை. முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோரின் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை காரைக்குடி சென்ற விஜயின் வாகனத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபோல், திருச்சி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரது தனி விமானத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் வாகனத்தையும் கிருஷ்ணகிரி மாவட்டம் அடிலம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் மறித்து சோதனை செய்தனர். சில நிமிடங்கள் நடைபெற்ற இந்த சோதனைக்கு பிரேமலதா விஜயகாந்த் முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்.

Source link