சென்னை,
உலக அரங்கில் இந்தியாவை முன்னோக்கி நகர்த்தும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பியூஸ் கோயலின் கருத்தை காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
45 ஆண்டுகளாக இல்லாத வேலைவாய்ப்பின்மை, அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவு ( இப்போதைய பிரதமரின் வயதையெல்லாம் எப்போதோ கடந்துவிட்டது! ), விலைவாசி உயர்வு, மாநில உரிமைகள் பறிப்பு, உச்சம் பெற்றுள்ள பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, முற்றிலும் தோல்வியடைந்த பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை, அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் சரணாகதி இதுதான் உலக அரங்கில் பாஜக இந்தியாவை முன்னோக்கி நகர்த்திய வரலாறு!
தமிழ்நாடு உண்மையிலேயே வளர்ச்சியடைந்த, இன்னும் வளர்ச்சியடைய வேண்டும் என்று விரும்புகிற மாநிலம். குறிப்பாக அமைதி,நல்லிணக்கம்,அன்பை. விரும்புகிற மாநிலம். பாஜகவை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். உங்கள் ‘புதுவிதமான ‘?!சிந்தனைகள் எங்களுக்குத் தேவையில்லை. அன்பிற்கு நன்றி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
