ஏர்போர்ட்டில் மோதல்: செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய விஜய்யின் பவுன்சர்கள்! – நடந்தது என்ன? – clash at the airport vijay bouncers attack journalists what really happened

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மீது தவெக தலைவர் விஜயின் பவுன்சர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தபோது, அவரது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் பவுன்சர்கள் அத்துமீறி செயல்பட்டு செய்தியாளர்களைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு சர்வதேச விமான நிலையத்தின் உள்ளேயே இத்தகைய விதிமீறல்கள் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமான நிலையத்தில் தன்னிச்சையான தடுப்புகள்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்தார். போலீசார் அனுமதி அளித்த பிரச்சார நேரம் நிறைவடைந்ததால் விஜய் மீண்டும் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அப்போது விஜயின் பவுன்சர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

செய்தியாளர்கள் மற்றும் போலீசாருடன் மோதல்

விமான நிலையத்தின் பொதுப் பகுதியில் செய்தி சேகரிக்க முயன்ற செய்தியாளர்களையும் ஊடகவியலாளர்களையும் பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த மோதலைத் தடுக்கவும், சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவரவும் முயன்ற காவல்துறையினரையும் விஜய்யின் பவுன்சர்கள் கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்த ஏர்போர்ட் அதிகாரிகளிடமே அடையாள அட்டை (ID Card) கேட்டு பவுன்சர்கள் மிரட்டல் விடுத்ததால், அந்தப் பகுதியில் கடுமையான கூச்சல் குழப்பமும் பதற்றமும் நிலவியது.

தொடரும் பவுன்சர்கள் கலாச்சார சர்ச்சை

விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்தே, அவரது பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் தனியார் பவுன்சர்களின் அத்துமீறல் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது. இதற்கு முன்பு நடந்த மாநாடுகள் மற்றும் பிரசாரங்களின்போதும் கட்சித் தொண்டர்களை மேடையில் இருந்து தள்ளிவிட்டது, பத்திரிகையாளர்களைத் தாக்கியது போன்ற புகார்களின் பேரில் விஜய்யின் பவுன்சர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

தற்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரையும், செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்களையும் ஏர்போர்ட் வளாகத்திற்குள்ளேயே பவுன்சர்கள் மிரட்டியுள்ள சம்பவம் பத்திரிகை வட்டாரத்திலும், தமிழக அரசியலிலும் பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.