உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து சாம்பியன்ஸ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் சாம்பியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில், முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இங்கிலாந்து சாம்பியன்ஸ் இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணியில், இரண்டு பேட்டர்கள் மட்டுமே சிறப்பாக செயல்பட்டனர். மொயின் அலி, 39 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 60 ரன்களை அடித்த நிலையில், இறுதிக் கட்டத்தில், ஓவைஸ் ஷா 28 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 38 ரன்களை சேர்த்தார்.
மற்ற எந்த பேட்டரும் 20 ரன்னை கூட தொடவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் ராய் 7 (7), டேவிட் மலான் 2 (5), கேப்டன் பொபாரா 16 (17), டென்லி 0 (1) போன்றவர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி ஷாக் கொடுத்தனர். இறுதியில், இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணி, 20 ஓவர்களில் 159/7 ரன்களை மட்டுமே சேர்த்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி பௌலர் டுவைன் பிராவோ, 4 ஓவர்களில் 21 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். பிராத்வெய்ட் 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்த நிலையில், ஷெல்டோன் கார்ட்ரேலும் சிறப்பாக பந்துவீசி, 4 ஓவர்களில் 29 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
மே.இ.தீவுகள் இன்னிங்ஸ்: இலக்கை துரத்திக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில், ஓபனர், கேப்டன் கிறிஸ் கெய்ல், 14 பந்தில் 21 ரன்களை அடித்து அவுட் ஆனப் பிறகு, மேற்கிந்தியத் தீவுகள் அணியில், எந்த விக்கெட்டும் விழவில்லை. மற்றொரு ஓபனர் சிம்மன்ஸ் 53 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 77 ரன்களை குவித்த நிலையில், வால்டன் 35 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 58 ரன்களை சேர்த்து அசத்தினார். இதனால், மேற்கிந்தியத் தீவுகள் அணி, 17 ஓவர்கள் முடிவில் 165/1 ரன்களை குவித்து அபார வெற்றியைப் பெற்று, கோப்பையை கைப்பற்றியது.
தொடர் நாயகன் விருதினை, மேற்கிந்தியத் தீவுகளை சேர்ந்த வால்டன் பெற்றுக் கொண்டார். இவர், 7 போட்டிகளில் 342 ரன்களை குவித்து அசத்தினார். மொயின் அலி, 5 போட்டிகளில் பேட்டிங் ஆடி 302 ரன்களை சேர்த்து 2ஆவது இடத்தில் இருக்கிறார். இந்த இரண்டு பேட்டர்கள் மட்டுமே 300+ ரன்களை அடித்தார்கள். டிவிலியர்ஸ் 5 போட்டிகளில் 262 ரன்களையும், டுமினி 5 போட்டிகளில் 262 ரன்களையும் எடுத்து, 3 மற்றும் 4ஆவது இடத்தில் இருக்கிறார்கள்.
இந்தியா சாம்பியன்ஸ் சார்பில் அதிக ரன்களை அடித்த பேட்டராக ராபின் உத்தப்பா இருக்கிறார். இவர், 4 போட்டிகளில் 142 ரன்களை சேர்த்தார். அதிக ரன்களை அடித்தோர் பட்டியலில் இவர், 15ஆவது இடத்தில் இருக்கிறார். அதிக விக்கெட்களை கைப்பற்றிய பௌலராக, தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணியில், ஹர்டஸ் வில்ஜோன் இருக்கிறார். இவர், 5 போட்டிகளில் 13 விக்கெட்களை கைப்பற்றிய நிலையில், மற்ற எந்த பௌலரும் 10+ விக்கெட்களை கைப்பற்றவில்லை.
