ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு முதலமைச்சர் ஜோசஃப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்கள் மிகவும் உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்தச் சிறப்புமிக்க நன்னாளில், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களுக்குத் தங்களது இதயம்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து
வாழ்வின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள், தொழிலை போற்றும் நன்னாள்”கல்வி, கலை, தொழில் என புதிதாக தொடங்கும் முயற்சிகளை சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாள்”இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்.ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்! அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும். ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத்தலைவர் வாழ்த்து
ஆயுதபூஜை மற்றும் துர்கா பூஜையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து .தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையில் பெண்களுக்கு உரிய மரியாதையை உறுதி செய்வதே துர்கைக்கு நாம் செலுத்தும் உண்மையான பக்தி என X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களைக் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளை அவர் உரித்தாக்கியுள்ளார். “விஜயதசமி திருநாளில் தொடங்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும்” என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், மக்கள் அன்னை மகா சக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் வெற்றித் திருநாளே விஜயதசமி பண்டிகையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “செய்யும் தொழிலே தெய்வம்” என்பதையும், “உழைப்பின் மூலமே வெற்றி” என்பதையும் உணர்த்தும் வகையில் இத்திருநாளைக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளமும், நலமும் பெற்றுச் சிறப்போடு வாழ்ந்திட வேண்டும் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் வாழ்த்தியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்
சிறப்புமிக்க இத்திருநாளில், மக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியும், அன்பும், வளமும், மகிழ்ச்சியும் பெருகிட வேண்டும் என அவர் மனதார வாழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி, தமிழகமெங்கும் ஒற்றுமையும் நல்லிணக்கமும் தழைத்தோங்கிட வேண்டும் என்று கூறி, அனைவருக்கும் தனது இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
நம் வாழ்வில் அறிவின் ஒளியையும், வளத்தின் வழியையும் அளிக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நன்னாளில், அனைவரது வாழ்விலும் கல்வியில் சிறந்து விளங்கவும், அறிவும் தன்னம்பிக்கையும் பெருகவும் அவர் வாழ்த்தியுள்ளார். மேலும், மக்களின் எதிர்கால கனவுகள் நிறைவேறவும், தொழில் பெருகவும், செல்வம் கொழிக்கவும், அனைத்து துறைகளிலும் மக்கள் வெற்றிபெறவும் அவர் தனது நல்வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழ்நாடு ஐஎன்டியுசி தலைவர் மு.பன்னீர்செல்வம்
உழைப்பிற்குத் துணையாக இருந்த கருவிகளுக்கும் ஆயுதங்களுக்கும் பூஜை செய்து நன்றி கூறி இறைவனிடம் வைத்து வணங்கும் திருநாளே ஆயுத பூஜை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கல்வி, கலை, இசை, ஞானம் மற்றும் அறிவியலுக்கும் தெய்வமாக விளங்கும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளை மனதார வணங்குவதாகவும், ஒவ்வொரு செயலிலும் இறை அருள் துணை நின்று அனைவரின் வாழ்விலும் வெற்றியையும் வளங்களையும் கொழிக்க வேண்டும் என்றும் அவர் இத்திருநாளில் வாழ்த்தியுள்ளார். இவ்வாறாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் விடுத்துள்ள வாழ்த்துகள் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
Source link
