ஆந்திர மாநிலத்திற்கு மிகப்பெரிய முதலீடு ஒன்றை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைப்பற்றியுள்ளார். இது இந்தியாவில் அமையும் மிகப்பெரிய தொழிற்சாலையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக திருப்பதி மாவட்டத்தில் அமையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநில வளர்ச்சி என்றால் சந்திரபாபு நாயுடுவை பிரித்து பார்க்க இயலாது. ஐடி துறையில் மிகப்பெரிய அளவில் முதலீடுகள் குவிய முக்கிய காரணமாக அமைந்தவர். தென்னிந்தியாவில் ஐடி ஹப் என்று சொல்லும் அளவிற்கு ஹைதராபாத் நகரை உயர்த்தி காட்டியவர். தற்போது ஆந்திராவை 4வது முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து ஆட்சி செய்து வருகிறார். முன்னதாக 1.25 லட்சம் கோடி மதிப்பில் விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீட்டை பெற்று தந்தார். அதாவது ஏஐ உள்கட்டமைப்பிற்கு உதவிகரமாக இருக்கும் வகையில் பிரம்மாண்ட டேட்டா சென்டர் ஹப் 600 ஏக்கரில் அமையவுள்ளது.
ஆந்திராவில் காலடி வைக்கும் ஹையர் நிறுவனம்
இந்த சூழலில் 7,000 கோடி மதிப்பிலான ஹையர் நிறுவனத்தின் முதலீட்டை ஆந்திர மாநிலத்திற்கு பெற்று தந்துள்ளார். இந்நிறுவனத்தை பொறுத்தவரை வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஏற்கனவே புனே, கிரேட்டர் நொய்டா ஆகிய நகரங்களில் தொழிற்சாலை அமைத்துள்ள நிலையில், தென்னிந்தியாவில் ஆந்திரா மாநிலத்திற்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் திருப்பதி மாவட்டம் சத்யவேடு மந்தல் பகுதியில் 250 ஏக்கரில் நிலம் கையகப்படுத்தி ஹையர் தொழிற்சாலையை அமைக்க சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.
ரூ.7,000 கோடி முதலீடு – 2032ஆம் ஆண்டு இலக்கு
முதல்கட்டமாக 4,500 கோடி ரூபாய், இரண்டாம் கட்டமாக 2,500 கோடி ரூபாய் என செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2032ஆம் ஆண்டு முழு வீச்சில் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் நேரடியாக 6 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 15 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே இரண்டு நகரங்களில் தொழிற்சாலைகள் இருந்தாலும், இந்தியாவில் மிகப்பெரிய தயாரிப்பு தொழிற்சாலை ஆந்திராவில் தான் அமைகிறது. இதை வைத்து மிகப்பெரிய அளவில் தொழில் வளர்ச்சியை எட்டுவதற்கு காய் நகர்த்துகின்றனர்.
சென்னை டூ சத்யவேடு மந்தல் – தமிழகத்திற்கு அருகில்
சத்யவேடு மந்தல் என்பது தமிழக எல்லையில் இருந்து மிக அருகில் அமைந்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தூரம் மட்டுமே. மேலும் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய நகரங்களில் இருந்தும் விரைவாக செல்ல முடியும். சென்னையில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
தொழில் மயமான திருப்பதி மாவட்டம்
திருப்பதி மாவட்டத்தை பொறுத்தவரை சுற்றுலா, சேவைத்துறை, விவசாயம், எலக்ட்ரானிக்ஸ் அசெம்ளி, ஆட்டோமோட்டிவ் உற்பத்தி, டெக்ஸ்டைல், பார்மா போன்ற தொழில்களில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பதியை ஒட்டி அமைந்துள்ள ஸ்ரீ சிட்டி, இஎம்சி-1, இஎம்சி-2, டாடா ஆகிய தொழில் மண்டலங்கள் பெரிதும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. இம்மாவட்டத்தில் பாக்ஸ்கான், டிக்சன், டிசிஎல், செல்கான், மைக்ரோமேக்ஸ், கார்பன் ஆகிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களும், அமர ராஜா பேட்டரிஸ், ஐசுசு மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப் போன்ற ஆட்டோமோட்டிவ் நிறுவனங்களும், கேட்பரி, பெப்சிகோ, கெல்லாக்ஸ் போன்ற உணவு நிறுவனங்களும், பிராண்டிஸ் இந்தியா, அபாச்சி போன்ற டெக்ஸ்டைல் நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.
சென்னை – திருப்பதி தொழில்வழித்தட வசதிகள்
இந்த வரிசையில் புதிதாக அமையவுள்ள ஹையர் இந்தியா நிறுவனம் திருப்பதி – சென்னை எலக்ட்ரானிக்ஸ் வழித்தடத்தில் புதிய பாய்ச்சலுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னை – திருப்பதி – நெல்லை தொழில் வழித்தடத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவும்.
Source link
