துபாயில் உதயநிதி ஸ்டாலின்: மீட்டிங் இல்லை, ஓய்வு மட்டுமே- பயண பின்னணியும், சர்ச்சையும் – know about opposition leader udhayanidhi stalin 3 days dubai visit

எதிர்க்கட்சி தலைவரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் துபாய் புறப்பட்டு சென்றுள்ளார். இந்த பயணத்தில் யாரை சந்திக்க போகிறார் என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பரபரப்பான அரசியல் சூழலில் இப்படியான பயணம் ஏன் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் நேற்று (அக்டோபர் 18) துபாய் பயணம் சென்றுள்ளார். இந்த நேரத்தில் ஏன் செல்கிறார்? என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர். குறிப்பாக ஆளுங்கட்சி உள்ளிட்ட பிற கட்சிகள் தங்களது விமர்சனத்திற்கு ஒரு பாயிண்ட் கிடைத்துவிட்டது என்று கையில் எடுத்துக் கொண்டனர். தற்போதைய தமிழக அரசியல் சூழலில் வெளிநாடு பயணம் ஏன் என்கின்றனர். ஏனெனில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. கடந்த 17ஆம் தேதி அன்று இரவு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இது 3 ஆண்டுகளுக்கு பின்னர் பெய்யும் பெருமழையாகும். தற்போது கோவை மற்றும் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியுள்ளது.

விஸ்வரூபம் எடுக்கும் பூபாலன் விவகாரம்

இதுதவிர விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவையும் பேசுபொருளாக மாறியுள்ளன. சமீபத்தில் நாகை தவெகவை சேர்ந்த நிர்வாகி பூபாலன் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதுபற்றி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதன் சாராம்சம் என்பது கட்சியா இல்லை நார்கோஸ் கூடாரமா எனக் கேட்கும் அளவிற்கு தவெக போதைப் பொருள் நெட்வொர்க்கின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது என்று கடுமையாக சாடியுள்ளார்.

தவெகவை போட்டு பொளந்த உதயநிதி ஸ்டாலின்

துபாய் சென்றுள்ள உதயநிதி ஸ்டாலின்

இத்தகைய விஷயங்களை எதிர்க்கட்சி தலைவராக அடுத்தடுத்து கையில் எடுத்து பேசி, களத்தில் நின்று போராட வேண்டிய உதயநிதி ஸ்டாலின் வெளிநாடு சென்று விட்டாரே என விமர்சிக்கின்றனர். இந்த பயணத்தை யாரை சந்திக்கிறார்? எனவும் ஆராய தொடங்கியுள்ளனர். இதுபற்றி அறிவாலய வட்டாரத்தில் விசாரிக்கும் போது, துபாய் பயணம் என்பது எந்தவித சந்திப்பிற்காகவும் அல்ல. 3 நாட்கள் ஓய்வெடுத்து விட்டு திரும்பவே உதயநிதி ஸ்டாலின் சென்றுள்ளார். கடந்த 5 மாத கால அரசியல் களத்தை எடுத்துக் கொண்டால் பரபரப்பிற்கு சிறிதும் பஞ்சமின்றி நகர்ந்திருக்கிறது.

பரபரப்பான தமிழக அரசியல் சூழல்

2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக எதிர்பார்த்திராத முடிவுகள், அதிமுகவை மையப்படுத்திய கூட்டணி கணக்குகள், தவெக ஆட்சி அமைக்க முன்னெடுத்த நகர்வுகள், இடம் மாறிய திமுக கூட்டணி கட்சிகள், ஒரு மாத காலம் சட்டப்பேரவை கூட்டத்தொடர், திமுகவினரை உத்வேகப்படுத்தும் வகையிலான நகர்வுகள், அடுத்தடுத்த கட்சி நிகழ்வுகள், நிர்வாகிகள் சந்திப்புகள், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்

துபாயில் 3 நாட்கள் ஓய்வெடுக்க திட்டம்

இவ்வாறு கடந்த 5 மாதங்கள் தமிழக அரசியல் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. இந்த காலகட்டங்கள் அனைத்திலும் கட்சியினரை தொடர்ச்சியாக சந்திக்கும் திட்டங்களை உதயநிதி ஸ்டாலின் வைத்திருந்தார். எனவே தனிப்பட்ட முறையில் சிறிய ஓய்வெடுக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே விரும்பினார். அதற்காக சில வாரங்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருந்தார். ஆகையால் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணம் தான் என்று உறுதி செய்துள்ளனர். இந்த விமானப் பயணத்திலும் சர்ச்சை ஒன்று வெடித்தது.

யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?

ஆகாஷ் பாஸ்கரன் உடன் உதயநிதி ஸ்டாலின் பயணித்துள்ளார். இவர் திரைப்பட தயாரிப்பாளர். திமுகவின் முக்கிய தலைவர்கள் உடன் நெருக்கமான நட்பில் இருப்பவர். அதேசமயம் டாஸ்மாக் முறைகேடுகள், சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளானவர். அமலாக்கத்துறை கண்காணிப்பு வளையத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவரை குறிவைத்து விசாரணை வளையத்தை நீட்டிக்க தவெக அரசும் காய் நகர்த்துகிறது. இப்படியான சூழலில் உதயநிதி ஸ்டாலினுடன் துபாய் சென்றது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Source link