அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என எஸ். பி. வேலுமணி மற்றும் சி. வி. சண்முகம் அணியினர் வலியுறுத்தினர். இந்நிலையில் அவர்களது முடிவை ஏற்றுக் கொள்ள எடப்பாடி பழனிசாமி முன்வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று தனிக் கட்சி தொடங்கி உள்ள டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க, எஸ். பி. வேலுமணி மற்றும் சி. வி. சண்முகம் அணியினர் எடப்பாடி பழனிசாமி க்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். இந்தச் சூழலில் மீண்டும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களைச் சேர்க்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர் தோல்விகள்
தமிழக அரசியல் களத்தில் ஆளுங்கட்சியாக இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் தொடர்ந்து ஏற்பட்டு வந்த உட்கட்சிப் பூசல் மற்றும் அதிமுகவினர் வேறு வேறு அணிகளாகப் பிரிந்ததே காரணமாகும். இந்த நெருக்கடியில் அதிமுக தேர்தல்களில் தோல்விகளைச் சந்தித்து வந்த நிலையில், அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்து மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.
வலுப்பெற்ற கோரிக்கை
இந்தச் சூழலில் சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு மீண்டும் கட்சியைக் கட்டமைக்க வேண்டுமென எஸ். பி. வேலுமணி மற்றும் சி. வி. சண்முகம் அணியினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். மேலும் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை கட்சியில் சேர்க்க வேண்டும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இடைத்தேர்தலின் தோல்விக்குப் பிறகு இந்தக் கோரிக்கை வலுப்பெற்றுள்ளதாகவும், கட்சியை மீண்டும் கட்டமைத்தால் மட்டுமே வருகிற உள்ளாட்சி மற்றும் மக்களவை தேர்தலில் வெற்றி முகம் அமையும் எனவும் அரசியல் வட்டாரங்கள் கூறியுள்ளன.
எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில், அக்கட்சியின் நிறுவனர் நாள் கொண்டாடப்பட்டது. இதில், அதிமுகவினர் பலர் பங்கேற்ற நிலையில், எஸ். பி. வேலுமணி மற்றும் சி. வி. சண்முகம் அணியினர் புறக்கணித்தனர். இந்தச் சூழலில் மக்களவை உறுப்பினர் தம்பிதுரை மற்றும் முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் ஆகியோர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
க்ரீன் சிக்னல் கொடுத்த எடப்பாடி பழனிசாமி
தொடர் தோல்விகள், விலகும் அதிமுக நிர்வாகிகள், ராஜினாமா செய்யும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிருப்தியில் இருக்கும் அதிமுக உறுப்பினர்கள் என அதிமுக மற்றும் அதன் தலைமை கடும் சிக்கலில் உள்ளது. இதனால் அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்களுக்கு அதிமுக மீது கடும் அதிருப்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே மீண்டும் கட்சியில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா தரப்பினரைச் சேர்த்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இனி வரும் இடைத்தேர்தல் கைகொடுக்குமா?
எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவின் எதிரொலி இனி நடக்க இருக்கும் 5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலில் தெரியவரும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மீண்டும் கட்சி ஒன்றிணைக்கப்படுவதால் இதுவரை சிதறிய வாக்குகள் அதிமுகவிற்குக் கிடைக்கலாம் எனவும், அதிருப்தியில் இருந்த தொண்டர்கள் மீண்டும் புதிய உத்வேகத்துடன் களத்தில் பணியாற்றுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
Source link
