சென்னை பறக்கும் ரயில் சேவை எனப்படும் MRTS (Mass Rapid Transit System), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் (CMRL) முழுமையாகக் கைமாற உள்ளது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த இந்த இணைப்புத் திட்டத்திற்கு மத்திய ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளதால் இனி ஏசி ரயில் பயணம் சாத்தியமாகும்.
எம்ஆர்டிஎஸ் சொத்துக்களை கைமாற்றுவதன் மூலம் தமிழக அரசுக்குச் சொந்தமான சுமார் 120 ஹெக்டேர் நிலம் அதாவது 296 ஏக்கர் நிலம் மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளது. சென்னையில் ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக எம்ஆர்டிஎஸ் எனப்படும் பறக்கும் ரயில்சேவை கடற்கரை முதல் செயின்ட் தாமஸ் மவுன்ட் வரை வழங்கப்பட்டு வருகிறது.
சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவான்மியூர், வேளச்சேரி வழியாக பரங்கிமலை வரை இயக்கப்பட்டு வரும் ரயில் இனி ஏசி ரயிலாக மாற்றப்பட்டு ரயில் நிலையங்கள் புதிய வளர்ச்சி அடைய உள்ளன.
₹600 கோடி முதல் ₹700 கோடி சொத்து மீட்பு
இந்திய ரயில்வேயிடம் உள்ள 33% பங்குகளைத் முந்தைய திமுக அரசு₹600 கோடி முதல் ₹700 கோடி வரை செலுத்தி முழுமையாக வாங்கியுள்ளது. இதன் மூலம் MRTS-ன் முழு உரிமையும் மாநில அரசுக்குக் கிடைக்கிறது. MRTS வழித்தடத்தில் உள்ள தண்டவாளங்கள், பாலங்கள், சிக்னல் அமைப்புகள், மின்மயமாக்கல் கட்டமைப்பு, ரயில் நிலைய கட்டங்கள் அனைத்தும் CMRL வசம் ஒப்படைக்கப்படும்.
2 ஆண்டுகள் வரை தெற்கு ரயில்வேயே பராமரிக்கும்
புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தான நிலையில், அடுத்த 2 ஆண்டுகளுக்கு தெற்கு ரயில்வே (Southern Railway) தற்போதைய ரயில்களை இயக்கும் மற்றும் பராமரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் டிக்கெட் விநியோகம், பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளை மெட்ரோ நிர்வாகம் மேற்கொள்ளும் என்றும் CUMTA அதிகாரிகள் கூறுகின்றனர்.
ரூ.4,200 கோடி முதல் ரூ.6,600 கோடியில் உட்கட்டமைப்பு
4,200 கோடி ரூபாய் முதல் 6,600 கோடி ரூபாய் வரையிலான செலவில், அனைத்து MRTS ரயில் நிலையங்களும் எஸ்கலேட்டர்கள், லிஃப்ட், சிறந்த விளக்குகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் மெட்ரோ தரத்திற்கு மாற்றப்படும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறினர். டெல்லி மெட்ரோவைப் போல அகல ரயில் பாதையில் (Broad gauge) இயங்கக்கூடிய 25 புதிய 3-கோச் குளிர்சாதன (AC) ரயில்களை கொள்முதல் செய்ய CMRL திட்டமிட்டுள்ளது.
CUMTA மூலம் ஒருங்கிணைந்த டிக்கெட்
சென்னை கடற்கரை (Chennai Beach) முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் (St. Thomas Mount) வரையிலான 25 கி.மீ வழித்தடம் மெட்ரோவுடன் இணைக்கப்பட்டு, ஒரே டிக்கெட் அல்லது ஸ்மார்ட் கார்டு மூலம் ரயில் சேவையை பயன்படுத்த CUMTA திட்டமிட்டுள்ளது. இந்த சொத்து மாற்றத்தின் முழுமையான மறுசீரமைப்பு மற்றும் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் 2028-ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source link
