காரைக்குடி பரப்புரை
சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் தன்னை பிரச்சாரம் செய்ய விடாமல் திட்டமிட்டு தடுப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்நிலையில் காரைக்குடிக்கு பரப்புரைக்கு வந்து, அவர் எதுவும் பேசாமல் திரும்பி சென்றுள்ளதை பிற கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், விஜய்யை விமர்சித்து பேசியுள்ளார்.
ப. சிதம்பரம் பேச்சு
இது சம்பந்தமாக காரைக்குடி பரப்புரையில் பேசியுள்ள ப. சிதம்பரம், அவருக்கு அரசியல் அனுபவம் கிடையாது. இன்னைக்கு காரைக்குடிக்கு வந்தாரு பேசாமலே போய்ட்டார். அரசியல் என்றால் பேச்சு, சர்ச்சை, விவாதம் தானே. பத்திரிக்கையாளர்களை சந்திப்பது கிடையாது. மக்களிடம் பேசுவது இல்லை. ரசிகர்கள் ஆதரவு உள்ளது. அதற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். ஆனால் ஆட்சி செய்வது வேறு. சினிமாவில் நடப்பது வேறு.
தவெக விஜய்
ஆட்சி செய்வது என்பது எளிதான காரியம் கிடையாது. சினிமா மாதிரி ரீடேக் எல்லாம் பண்ண முடியாது. ஒரு முடிவு எடுத்தால் என்றால் அதை மாற்ற முடியாது என விமர்சனம் செய்துள்ளார் ப. சிதம்பரம். காங்கிரஸின் மூத்த நிர்வாகியான அவர், விஜய் குறித்து வைத்துள்ள விமர்சனம் அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. ஏனென்றால் கடந்த முறை நெல்லை பரப்புரையில் பேசிய தவெக தலைவர் விஜய், உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம் தான் இருக்கிறது என்றார்.
தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு
அவருடைய இந்த பேச்சு திமுக கூட்டணியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக காங்கிரஸ், தவெக இடையில் கூட்டணி பேச்சுவார்த்தை நான்த நிலையில், அது கை கூடாமல் போய்விட்டது. இப்படியான நிலையில் உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம்தான் இருக்கிறது என தவெக விஜய் பேசினார். அவருடைய இந்த பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கடுமையான கண்டனங்கள் தெரிவித்தது. மறைமுகமாக தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக்காக முயற்சி செய்தது.
செல்வப்பெருந்தகை விமர்சனம்
விஜய்க்கு அரசியல் புரிதலற்ற நிலையில், ஆரம்பக்கட்டத்திலே அது நிராகரிக்கப்பட்டு விட்டதாக தமிழக காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டது. தொடர்ந்து மாநில தலைவரான செல்வப்பெருந்தகையும் விஜய்யின் பேச்சு அரசியல் நாகரிகமற்றது என தெரிவித்தார். அதோடு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், காங்கிரஸ் திமுக பக்கம் தான் நிற்கிறது. விஜய் ஒரு முதிர்ச்சியற்ற தலைவர் என ஒரே போடாக போட்டார். இப்படியான நிலையில் விஜய்க்கு எதிராக ப. சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்து பேசு பொருளாகியுள்ளது.
தவெகவினர் ஏமாற்றம்
இதனிடையில் காரைக்குடி தொகுதியில் பிரபு என்பவர் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக போட்டியிடுகிறார். அதே போல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இந்த தொகுதியில் போட்டி போடவுள்ளார். இதன் காரணமாக காரைக்குடியில் விஜய்யின் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பரப்புரை நடக்கும் இடத்திற்கு வந்து கையசைத்து விட்டு விஜய் திரும்பி சென்று விட்டது தவெகவினரை ஏமாற்றம் அடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
