சிவகங்கை மாவட்டத்தில் சுள்ளான் மதன் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் முன்விரோதம் இருக்கலாம் என விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சமூக வலைதளங்களில் வெளியாகும் சில Instagram ஸ்டோரிகள் தற்போது கவனம் பெற்றுள்ளன. ஒரு பக்கம் சுள்ளான் மதனின் பழைய வீடியோக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் பழிவாங்குவது தொடர்பான வாசகங்களும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சி.. வைரலாகும் வீடியோ!
சுள்ளான் மதன் சமூக வலைதளங்களில் ஏற்கெனவே பிரபலமாக இருந்தவர். அவர் ஆயுதங்களுடன் இருக்கும் வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் Instagram-ல் பகிரப்பட்டுள்ளன. சில வீடியோக்களில் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிகள் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் அவை பகிரப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அவரது கொலைக்குப் பிறகு இந்த வீடியோக்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன. இதற்கிடையே, கொலைச் சம்பவம் தொடர்பான காட்சிகளும் சில Instagram ஸ்டோரிகளில் பகிரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், ஒவ்வொரு வீடியோவும் எப்போது எடுக்கப்பட்டது, அதில் இருப்பவர்கள் யார் என்பதை காவல்துறை விரைந்து விசாரிக்க வேண்டும்.
ஒரு பக்கம் கொலை தொடர்பான ஸ்டோரி.. மறுபக்கம் பழிவாங்கும் வாசகங்கள்!
சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சில Instagram கணக்குகளில் பகிரப்பட்ட ஸ்டோரிகள் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒரு தரப்பினர் கொலை தொடர்பான காட்சிகளைப் பகிர்ந்துள்ளதாகத் தெரியும் நிலையில், மற்றொரு தரப்பினர் பழிவாங்குவது போன்ற பொருள்படும் வாசகங்களைப் பதிவிட்டுள்ளனர். குறிப்பாக, பழிக்குப் பழி வாங்குவது தொடர்பான பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதனால், இந்தக் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த Instagram ஸ்டோரிகளைப் பதிவிட்டவர்கள் தங்களது username -களில் சுல்லான் என்ற பெயரை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Instagram கணக்கு முடக்கம்? என்ன காரணம்?
இந்தச் சம்பவம் தொடர்பான ஸ்டோரிகளைப் பகிர்ந்ததாகக் கூறப்படும் ஒரு Instagram கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் கணக்கு Instagram நிர்வாகத்தால் முடக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. எனவே, கணக்கு முடக்கப்பட்டதற்கான காரணம் குறித்தும் அதிகாரப்பூர்வ விளக்கம் தேவைப்படுகிறது.
2024 இரட்டைக் கொலை வழக்கும் தற்போதைய கொலையும்!
சுள்ளான் மதன், கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜல்லிக்கட்டு காளையைப் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து ஜெயசூர்யா, சுபாஷ் ஆகிய இரு சகோதரர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அவர், சிவகங்கை மாவட்டம் மேலமங்களத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியைக் காணச் சென்றபோது கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை, முந்தைய இரட்டைக் கொலைக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாகவும், மற்றவர்களைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக வலைதளப் பதிவுகள் அடுத்த மோதலுக்கு வழிவகுக்குமா?
ஒரு கொலைச் சம்பவத்துக்குப் பிறகு அதனைப் பெருமைப்படுத்தும் வகையிலான பதிவுகள் அல்லது பழிவாங்கும் வாசகங்கள் சமூக வலைதளங்களில் பரவுவது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் Instagram போன்ற தளங்களில் வன்முறையைப் பிரதிபலிக்கும் வீடியோக்களும் பதிவுகளும் பரவுவது கவலைக்குரியதாக உள்ளது. சுள்ளான் மதன் கொலை வழக்கின் பின்னணி, சமூக வலைதளங்களில் வெளியாகும் ஸ்டோரிகளின் உண்மைத்தன்மை மற்றும் கணக்கு முடக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல் ஆகியவை தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறை அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இன்ஸ்டா ஸ்டோரிகள்
