வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மதுராந்தகம் ஏரியில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய புதிய பூங்கா அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த நிலையில், சொன்னபடியே முதல்வர் விஜய் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் வாக்குறுதிகளுக்கான புதிய அறிவிப்புகளை இன்றைய தினம் வெளியிட்டு இருக்கிறார்.
மதுராந்தகம் ஏரிக்கு சிறப்பு அறிவிப்பு
இந்த அறிவிப்பில்தான் மதுராந்தகம் ஏரிக்கான சிறப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே மதுராந்தகம் ஏரியைச் சுற்றுலாத் தளமாக மாற்றும் திட்டம் தமிழக அரசுக்கு இருந்தது. ரூ.15 கோடியில் வடக்குச் சவாரிப் பூங்கா அமைக்க அரசு ஏற்கனவே திட்டமிட்டு இருந்த சூழலில், இன்றைய தினம் மதுராந்தகம் தொகுதிக்கு 11 நலத்திட்டங்களை முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறார். பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் மதுராந்தகம் ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்புப் பரப்பளவு 2,500 ஏக்கர் ஆகும். இங்கு படகு சவாரி, தீம் பார்க் போன்றவற்றை அமைக்க அரசு திட்டமிட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
வரலாற்றுச் சிறப்புமிக்க மதுராந்தகம் ஏரி
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் பிரிவதற்கு முன்பு அவை ஏரிகளின் மாவட்டம் என்று அழைக்கப்பட்டன. அந்த ஏரிகளின் மாவட்டத்தில் அமைந்திருக்கக்கூடிய மதுராந்தகம்மிகவும் புகழ்பெற்ற, வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் ஏரியாகும். மதுராந்தகத்தில் இருக்கக்கூடிய ஏரி சோழ மன்னன்மதுராந்தகன் என அழைக்கப்படும் பராந்தக சோழனால் கட்டப்பட்டது என்ற சிறப்பும் அதற்கு உண்டு.
மதுராந்தகம் தொகுதிக்கான நலத்திட்டங்கள் என்ன?
மதுராந்தகம் தொகுதிக்காக முதல்வர் விஜய் அறிவித்துள்ள நலத்திட்டங்கள் பின்வருமாறு:
– அத்திமரம் கிராமம்: பூக்கத்துறை மடுவின் குறுக்கே ரூ.5 கோடியில் தடுப்பணை அமைத்தல்.
– பின்னலூர்: ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் அமைத்தல்.
– தூத்துக்குடி: 25 ஏக்கரில் மாநில விதைப்பண்ணை அமைத்தல்.
– அச்சரப்பாக்கம்: ரூ.200 கோடி மதிப்பில் புதிய அரசு மகளிர் கலைக் கல்லூரி அமைத்தல்.
– மதுராந்தகம் அரசு மருத்துவமனை: ரூ.10 கோடி மதிப்பில் விபத்து மற்றும் அவசரகால சிகிச்சைப் பிரிவு அமைத்தல்.
– மதுராந்தகம் நகராட்சி: பணிபுரியும் பெண்களுக்கான புதிய தங்கும் விடுதி அமைத்தல்.இவ்வாறு, 11 அம்சத் திட்டங்களை முதல்வர் விஜய் மதுராந்தகம் பகுதி மக்களுக்காக அறிவித்திருக்கிறார்.
