“ஜன நாயகன்” படத்திலும் இஸ்லாமியர்கள் தான் தீவிரவாதிகளா- இயக்குநர் அமீர் கேள்வி

நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய், ‘ஜன நாயகன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை வாரிய குழுவினர், மதம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரை செய்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின் ‘ஜன நாயகன்’ படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பியது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவடைந்தவுடன் மே இரண்டாவது வாரத்தில் ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

ஜன நாயகன் முழு படமும் இணையத்தில் வெளியானது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானதற்கு நடிகர் சிவகார்த்திகேயன், சிரஞ்சீவி உள்ளிட்ட திரைபிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.படக்காட்சிகளை யாரும் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

ஜனநாயகன் படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாகவும், அவர்களை தீவிரவாதிகளா சித்தரிப்பதாகவும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் அமீர் தனது வாட்ஸ்அப் ஸ்டேடஸில் வெளியிட்ட பதிவில், “கசிந்திருக்கும் ஜனநாயகன் படக் காட்சியிலும் இஸ்லாமியர்கள் தான் தீவிரவாதிகளா? இது தான் தங்களின் அரசியலா? எப்போது தான் மாறும் இந்த மனநிலை” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான ‘துப்பாக்கி’ திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் இடம்பெற்றிருந்ததாக கூறி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின.

Source link