மாடியில் இருந்து குதித்ததில், உயிரிழந்தது தெரியவந்துள்ளது :
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பொன்னியம்மன் நகரில் 2வது மாடியில் உள்ள தனி அறையில் வாடகைக்கு வசித்து வருபவர் மலையப்பன். நெல்லையை சேர்ந்த மலையப்பன் குடும்பத்தினர் ஊரில் வசித்து வரும் நிலையில் பொன்னேரியில் வீடு எடுத்து தனியாக தங்கி, அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல 2வது மாடியில் மலையப்பன் கதவைத் திறந்து கொசு வலை கட்டி, தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் யாரோ வந்ததை உணர்ந்து எழுந்துள்ளார். அப்போது திருட வந்த திருடன் மலையப்பனின் செல்போனையும் பணத்தையும் திருடிக் கொண்டு மலையப்பன் எழுந்ததை கண்டு சுமார் 20 அடி உயரத்தில் 2வது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். திருடுவதற்காக வந்து பொதுமக்களிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக மாடியில் இருந்து குதித்ததில், உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபர் யார், வேறு எங்கெல்லாம் திருடி உள்ளார், எங்கெல்லாம் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அக்கம் பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து திருட்டு சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டாரா அல்லது கூட்டாளிகள் யாரேனும் வந்து தப்பிச் சென்றனரா என்பது குறித்தும்.
காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் திருட வந்து தப்பிப்பதற்காக மாடியில் இருந்து குதித்து திருடன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
