தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் சூழலில், கொங்கு மண்டலத்தின் முக்கிய தளபதியும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து வெளியிட்ட கருத்துகள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கோவையில் அவர் எழுப்பிய ஒற்றுமைக் குரலும், எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு அவர் அளித்த முற்றுப்புள்ளியும் தற்போது மாநிலம் முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
Edappadi தெளிவாக சொன்னார் – இனிமே No Chance!
ஒற்றுமைக்கான மறைமுக அழைப்பு
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எஸ்.பி. வேலுமணியிடம் அதிமுகவின் தற்போதைய நிலை மற்றும் கட்சியை விட்டுப் பிரிந்தவர்கள் திரும்புவது குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த அவர், கட்சியைவிட்டுப் பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் தாய்க்கழகத்திற்குத் திரும்பி வர வேண்டும்
பிரிந்து இருப்பதால் யாருக்கும் எந்த லாபமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே கட்சியை முழுமையாகப் பலப்படுத்த முடியும் என்றும், அதற்கான முறையான நடவடிக்கைகளைத் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி விரைவில் எடுப்பார் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.வேலுமணியின் இந்தப் பேச்சு வெறும் சாதாரண கருத்தாகப் பார்க்கப்படவில்லை;
மாறாக இது ஒரு மிக முக்கியமான அரசியல் சிக்னலாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, அதிமுகவில் இருந்து பல்வேறு சூழ்நிலைகளில் பிரிந்து சென்ற ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய மூவரையும் குறிவைத்தே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்த முக்கியத் தலைவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்தால் மட்டுமே, வாக்கு வங்கியை அதிகப்படுத்தி ஆளுங்கட்சியான தவெக-வை வலுவாக எதிர்க்க முடியும் என்பதே அடிமட்டத் தொண்டர்களின் நீண்ட நாள் கணக்காக உள்ளது.
தவெக வதந்திக்கு அதிரடி முற்றுப்புள்ளி
இந்த ஒற்றுமைப் பேச்சு ஒருபுறம் விவாதிக்கப்பட்டு வந்தாலும், மறுபுறம் கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு பரபரப்பான தகவல் தீயாகப் பரவியது.
அதாவது, அதிமுக மீது கடும் அதிருப்தியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் எஸ்.பி. வேலுமணி தலைமையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் விரைவில் இணையப் போவதாகத் தகவல்கள் பரவவிடப்பட்டன. இந்தத் தகவல் அதிமுகவின் கோட்டையான கொங்குப் பகுதியிலும்,அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.
இந்த வதந்திகளுக்குக் கோவையிலேயே மிகத் தகுந்த மற்றும் அதிரடியான பதலடியைக் கொடுத்துள்ளார் எஸ்.பி. வேலுமணி. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இதுபோன்ற பொய்யான வதந்திகளைத் தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், “நான் அதிமுகவை விட்டு எங்கும் செல்ல மாட்டேன்; என் உயிர் இருக்கும் வரை நான் ஒரு உண்மையான அதிமுக தொண்டனாகவே தொடர்வேன். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா காட்டிய வழியில்தான் என் அரசியல் பயணம் அமையும்;
எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையின் கீழ் வாழ்நாள் முழுவதும் கழகத்திற்காக உழைப்பேன்” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். வேலுமணியின் இந்த நேரடியான மற்றும் உறுதியான பேச்சு, தவெகவுக்கு அவர் தாவுகிறார் என்ற வதந்திக்கு முழுமையான முற்றுப்புள்ளியை வைத்துள்ளது.
அரசியல் களத்தில் எழுந்துள்ள கேள்விகள்:
எஸ்.பி. வேலுமணியின் இந்த அதிரடிப் பேட்டிக்குப் பிறகு தமிழக அரசியலில் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன. ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவுடன் கைகோர்ப்பாரா? சசிகலா மற்றும் டிடிவி தினகரன் வருகை கட்சியின் பலத்தை மீண்டும் அதிகரிக்குமா? தவெக வதந்தியின் பின்னணி யார்? அதிமுகவை உடைக்க வேண்டும் என்று திட்டமிட்டு இந்த வதந்தியை பரப்பியது யார்?போன்ற முக்கியக் கேள்விகள் அரசியல் அரங்கில் எழுந்துள்ளன.
ஒருபுறம் கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஒற்றுமைக் குரலையும், மறுபுறம் தன் மீது தொடுக்கப்பட்ட வதடிகளுக்கு வலுவான பதிலடியையும் கொடுத்து வேலுமணி இரட்டை அஸ்திரத்தை வீசியுள்ளார். இந்தச் சூழலில், எடப்பாடி பழனிசாமி இதற்குக் என்ன மாதிரியான இறுதி முடிவுகளை எடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்தே அதிமுகவின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் அமையும் என்பதில் ஐயமில்லை.
Source link
