மீண்டும் பதற்றத்தில் மணிப்பூர்: ஆயுதக் குழுக்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு– இம்பாலில் கடைகள் அடைப்பு! – manipur on boil again 3 civilians shot dead by militants near imphal border

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறி, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்போக்பி மற்றும் இம்பால் கிழக்கு மாவட்ட எல்லைப் பகுதியில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய கொடூர தாக்குதலில் 3 பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த வன்முறையைக் கண்டித்து, பலியானவர்களின் உடல்களுடன் முதலமைச்சர் இல்லத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் தலைநகர் இம்பால் போர்க்களமாக மாறியது.

காட்டில் நடந்த கொடூரம்

மணிப்பூரின் நோங்ஷும் கிராமத்தையொட்டியுள்ள கோங்பால் சுனுரோக் உயோக் (Khongbal Sunurok Uyok) காட்டுப் பகுதிக்கு, இன்று காலை வழக்கம் போல உள்ளூர் பொதுமக்கள் சிலர் விறகு சேகரிப்பதற்காகச் சென்றுள்ளனர். அவர்கள் காட்டின் உள்ளே சென்ற சமயம், அங்கு மறைந்திருந்த ஆயுதமேந்திய தீவிரவாதிகள் சிலர், பொதுமக்கள் மீது திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த கோரத் தாக்குதலில் அருபம் ரோனில், லைரென்லக்பம் இனாபி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும், மைஸ்னம் சோமேந்த்ரோ உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு இம்பாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டின் போது சிதறி ஓடிய மேலும் 3 பேர் இன்னும் வீடு திரும்பவில்லை; அவர்கள் என்ன ஆனார்கள் என்ற விவரமும் தெரியவில்லை.

முதலமைச்சர் இல்லம் முற்றுகை – கண்ணீர் புகை குண்டு வீச்சு

தாக்குதல் குறித்த செய்தி பரவியதும் ஒட்டுமொத்த கிராம மக்களும் கொதித்தெழுந்தனர். பாதுகாப்பு குறைபாடே இந்த மரணங்களுக்குக் காரணம் என ஆத்திரமடைந்த பொதுமக்கள், உயிரிழந்தவர்களின் உடல்களை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு தலைநகர் இம்பாலில் உள்ள முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை நோக்கி விரைந்தனர்.

முதலமைச்சர் இல்லத்தின் முன்பாக உடல்களைச் சாலையில் கிடத்தி, “எங்களுக்கு நீதி வேண்டும், வன்முறையாளர்களைக் கைது செய்” என முழக்கமிட்டு திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு வளையத்தை உடைத்துக்கொண்டு மக்கள் முதலமைச்சர் இல்லத்திற்குள் நுழைய முயன்றதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க காவல் துறையினரும், பாதுகாப்புப் படையினரும் போராட்டக்காரர்கள் மீது அதிரடியாகக் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட தடியடியில் போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

முடங்கியது இம்பால்

இந்த வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து மணிப்பூர் பள்ளத்தாக்கு முழுவதும் மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. இம்பாலில் உள்ள முக்கிய சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் உடனடியாக அடைக்கப்பட்டன. சாலைகளில் ஆங்காங்கே மின்கம்பங்கள் மற்றும் டயர்கள் எரிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.

பாதுகாப்புப் பணியில் இருந்த அசாம் ரைபிள்ஸ் படையினரின் அலட்சியமே இந்த தாக்குதலுக்குக் காரணம் என உள்ளூர் எம்.எல்.ஏ தோக்சோம் லோகேஷர் சிங் குற்றம் சாட்டியுள்ளார். எல்லைப் பகுதிகளில் உள்ள ஆயுதக் குழுக்களின் முகாம்களை உடனடியாக ராணுவம் அகற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போது அசம்பாவிதங்களைத் தவிர்க்க கூடுதல் பாதுகாப்புப் படையினர் இம்பால் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Source link