மீன் குழம்பு சாப்பிட்டதால் தான் உடல்நிலை பாதிக்கப்பட்டதா?
மரக்காணம் அருகே குரும்புரம் கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி ராதா(65). இவரது குடும்பத்தினர் நேற்று மதியம் மரக்காணம் அருகே மண்டவாய்புது குப்பம் பகுதியில் மீன் வாங்கி வந்துள்ளனர்.
இந்த மீனை குழம்பு வைத்து ராதாவின் மகன் ராஜசேகர்(35), மருமகள். ராஜேஸ்வரி(30), பேத்தி பிரியா(9), மற்றும் உறவினர்கள் குப்பு(55), ராஜி(35) ஆகிய 6 பேர் நேற்று மதியம் சாப்பிட்டு உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அதே மீன் குழம்பை இவர்கள் அனைவரும் நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு தூங்கி உள்ளனர். அப்போது திடீரென இவர்கள் அனைவருக்கும் மயக்கம் ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளனர். இதனைப் பார்த்த இவர்களது உறவினர்கள் உடனடியாக இவர்கள் அனைவரையும் மரக்காணம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர்.
மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே மூதாட்டி ராதா பரிதாபமாக இறந்துவிட்டார். மற்ற அனைவரும் புதுவை மாநிலம் ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இவர்கள் மீன் குழம்பு சாப்பிட்டதால் தான் உடல்நிலை பாதிக்கப்பட்டதா?
அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்தில் முதல் கட்ட விசாரணையை துவங்கி உள்ளனர். மீன் குழம்பு சாப்பிட்டதில் ஒரே குடும்பத்தில் ஆறு பேர் மயக்கம் அடைந்து ஒரு பெண் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு இந்த சம்பவத்திற்கான உண்மை காரணம் தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர்.
