‘லியோ’ படப்பிடிப்புக் காலத்தில் நடிகர் விஜய் கிரிக்கெட் விளையாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கிரிக்கெட் மீது விஜய்க்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தும் இந்தக் காட்சியை ரசிகர்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்
தமிழக அரசியலில் தொடர்ந்து கவனம் பெற்று வரும் விஜய், தற்போது கிரிக்கெட் தொடர்பான ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலமாகவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். கிரிக்கெட் விளையாடும் விஜயின் வீடியோ எனக் கூறி பகிரப்படும் இந்தக் காட்சி, அவருக்குக் கிரிக்கெட் மீது இருக்கும் நீண்டகால ஆர்வம் குறித்த பழைய தகவல்களை மீண்டும் பேச வைத்துள்ளது.
பவுலிங் வீசும் விஜய்
சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், விஜய் பந்துவீசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனுடன், “CM Thalapathy Vijay’s bowling” என்ற வாசகமும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய்க்கும் கிரிக்கெட்டுக்கும் இடையிலான தொடர்பு இன்று நேற்று உருவானதல்ல என்பதும் கவனிக்கத்தக்கது.
சினிமாவும் கிரிக்கெட்டும் விஜய்க்குப் பிடித்தமானவை!
விஜய் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்ததாகப் பழைய தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதில் தனக்கு அதிக ஆர்வம் இருப்பதாக அவர் முன்பு தெரிவித்திருந்தார்.
CSK-வும் முதல்வர் விஜயும்
2008ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்கக் கால பிராண்ட் அம்பாசிடராக விஜய் அறிவிக்கப்பட்டார். அப்போது, கிரிக்கெட் மீதான தனது விருப்பத்தையும், இந்திய அணியின் போட்டிகளைத் தொடர்ந்து கவனித்து வந்ததையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். அந்தக் காலகட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ். தோனி மீதும் விஜய் தனி மதிப்பு வைத்திருந்தார். தோனியின் தலைமைத்துவத்தைப் பாராட்டிய அவர், சென்னையின் அணியுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அந்தச் சமயத்தில் விஜய் கூறிய கருத்துகள், கிரிக்கெட் என்பது அவருக்கு வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; நீண்டகாலமாகத் தொடர்ந்து வந்த தனிப்பட்ட ஆர்வம் என்பதையும் வெளிப்படுத்துகின்றன.
கல்லூரி காலத்திலேயே கிரிக்கெட் விளையாடிய விஜய்!
விஜயின் கிரிக்கெட் ஆர்வம் குறித்த மற்றொரு சுவாரஸ்யமான தகவலும் பழைய நேர்காணல் செய்தியில் இடம்பெற்றுள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் மீது தனக்கு இருந்த ஈடுபாடு குறித்துப் பேசியபோது, கல்லூரி அளவில் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இதன் மூலம், கிரிக்கெட் போட்டிகளைத் தொலைக்காட்சியில் பார்ப்பதோடு மட்டுமின்றி, நேரடியாக விளையாடுவதிலும் விஜய் ஆர்வம் கொண்டிருந்தது தெரியவருகிறது.
விஜய் மகனுக்கும் கிரிக்கெட்டில் ஆர்வம் உண்டு
மேலும், தனது மகனுக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்ததாகவும், அவர் எம்.எஸ். தோனியின் ரசிகராக இருந்ததாகவும் விஜய் அப்போது குறிப்பிட்டிருந்தார். தோனியைச் சந்திக்க வேண்டும் என்ற தனது மகனின் விருப்பத்தைப் பற்றியும் அவர் பேசியிருந்தார்.
மகனுடன் வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடிய அனுபவம்!
விஜயின் கிரிக்கெட் ஆர்வத்தை எடுத்துக்காட்டும் மற்றொரு நிகழ்வும் ஒரு நேர்காணல் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது. விஜயின் வீட்டில் நேர்காணல் மற்றும் படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அவர் தனது மகனுடன் வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததாக அந்தக் கட்டுரையை எழுதிய செய்தியாளர் நினைவுகூர்ந்துள்ளார். அப்போது, தான் கிரிக்கெட் விளையாடுவதை விரும்புவதாக விஜய் தெரிவித்ததாகவும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம், கிரிக்கெட் மீதான அவரது ஈடுபாடு தனிப்பட்ட வாழ்க்கையிலும் இருந்ததைக் காட்டுகிறது.
வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்படும் வீடியோ, விஜய் கிரிக்கெட் விளையாடும் காட்சிகளை மீண்டும் ரசிகர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, அவர் பந்துவீசும் காட்சி எனக் கூறப்படும் பகுதி ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ லியோ படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜயின் மற்றொரு விருப்பமாகக் கிரிக்கெட் இருப்பது, அவரைப் பற்றிய பழைய தகவல்களை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.
பவுலிங் வீசும் விஜய்
