தமிழக அரசின் 21% கடன் குறைவு: வளர்ச்சிப் பணிகள் எங்கே? தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி – dmk thangam thennarasu says tvk govt should also disclose capital expenditure, which is 21 percent less debt

தமிழ்நாடு அரசு தனது நிதிக் மேலாண்மையைச் சிறப்பாகக் கையாண்டு, நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் அரையாண்டில் அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் 2026 வரையிலான காலக்கட்டத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்காகக் கடன் வாங்கும் விகிதத்தை 21 சதவீதம் வரை அதிரடியாகக் குறைத்துள்ளது.

கடன் தொகையில் கணிசமான சரிவு

கடந்த நிதியாண்டின் முதல் பாதியில் ரூ.51,300 கோடியாக இருந்த தமிழக அரசின் ஒட்டுமொத்தக் கடன் அளவு, இந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.40,500 கோடியாகக் குறைந்துள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான இந்த முதல் அரையாண்டில் கடன் வாங்கும் அளவு சரிவைக் கண்டுள்ளது மாநில அரசின் பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குச் சான்றாகப் பார்க்கப்படுகிறது.

TOP 3 Rich முதலைமைச்சர்கள் ! CM.விஜய் எந்த இடம்?

தேசிய அளவில் ஐந்தாம் இடத்திற்கு முன்னேற்றம்

முந்தைய காலங்களில் இந்தியாவில் அதிகளவில் கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போது மிகுந்த எச்சரிக்கையுடனும் நிதி ஒழுங்குமுறையுடனும் கடன்களைக் கையாண்டு வருகிறது. இதன் விளைவாக, தற்போது கடன் வாங்கும் மாநிலங்களின் வரிசையில் ஐந்தாம் இடத்திற்குப் பின்வாங்கியுள்ளது. அரசின் இந்த விவேகமான நிதி நிர்வாகம் பொருளாதார நிபுணர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழக அரசு கடன் 21 சதவீதம் குறைவு

இது குறித்து திமுக முன்னாள் அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் தமிழ்நாடு அரசு, மாநில அரசுப் பத்திரங்கள் மூலம் திரட்டிய கடன் 21% குறைந்துள்ளதாகச் செய்திகள்வெளியாகியுள்ளன.

ஆனால், குறைந்த அளவு கடன் வாங்கியுள்ளதாகச் சொல்லி அதனை ஒரு சாதனையாக முன்னிறுத்த முயற்சிக்கும் தவெக அரசு, எவ்வாறு இந்த கடன் தேவை குறைந்தது என்பதையும், இந்த முதல் அரையாண்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளையும் மூலதனச் செலவையும் வெளியிட வேண்டாமா?

தமிழக அரசின் ரூ.48,000 கோடி கடன் திட்டம்

கழக ஆட்சியின் கடந்த 2025–26 நிதிநிலை அறிக்கையில் மூலதனச் செலவினங்களுக்கு ரூ.57,231 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் CAG-இன் தற்காலிக மாதாந்திரக் கணக்குகளின்படி, 2025 ஏப்ரல்–செப்டம்பர் காலத்தில் ரூ.13,002.22 கோடி அளவிற்கு மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கான மூலதனச் செலவு மேற்கொள்ளப்பட்டது.

தவெக அரசு, இந்த நிதி ஆண்டில் மூலதன செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில், அதே ஏப்ரல்- செப்டம்பர் மாத காலகட்டத்தில் மேற்கொண்ட மூலதனச் செலவு எவ்வளவு? புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குச் செலவிட்டது எவ்வளவு? திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளுக்கு இன்னும் தவெக அரசால் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? இந்த விவரங்களை எல்லாம் அரசு வெளியிடுமா?

தமிழக வளர்ச்சித் திட்டங்கள் நிலுவைத் தொகை

வளர்ச்சிப் பணிகளைத் தாமதப்படுத்தியும், செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகைகளை வழங்காமலும், பண இருப்பை அதிகமாகக் காட்டி, குறைந்த அளவே கடன் வாங்கிவிட்டு, அதனை நிதி மேலாண்மையின் சாதனையாகக் கூற முடியுமா? வழங்க வேண்டிய தொகைகளை நிலுவையில் வைத்திருப்பது சேமிப்பாகிவிடுமா?

முதல் அரையாண்டில் கடன் குறைந்ததாகக் கூறும் தவெக அரசு, அக்டோபர்–டிசம்பர் காலாண்டில் மட்டும் ரூ.48,000 கோடி கடன் பெறத் திட்டமிட்டுள்ளது. இது முந்தைய காலாண்டில் திரட்டிய ரூ.23,500 கோடியைவிட இரு மடங்குக்கும் அதிகமல்லவா?

மூலதனச் செலவு விவரங்களை வெளியிடக் கோரிக்கை

த.வெ.க. அரசின் வரவு செலவுத் திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டதை விட, குறைந்த அளவிலேயே அரசின் வருவாய் இருந்து வரும் நிலையில், முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ள முடியாமல் இந்த அரசு திணறுவதால் மட்டுமே கடன் தேவை குறைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த புள்ளிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாதால் சாலைகள் மோசமாக உள்ளன.

கட்டிடப் பணிகள் பாதியில் நிற்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்து நிற்கின்றனர். எனவே, இதனை தங்களின் சாதனை எனச் சொல்லி மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, மேற்கொள்ளப்பட்ட மூலதனச் செலவு, செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு இன்னும் விடுவிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகை ஆகியவற்றின் முழு விவரங்களையும் வெளியிட்டு, தவெக அரசு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Source link