மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா கட்சிப் பதவிக்காக ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்டது போன்ற ஆடியோ வெளியாகி, இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் சூழலில், முஸ்தபா மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துப் பேசியிருந்தாலும், பொதுவெளியில் இந்த விவகாரம் தொடர்ச்சியாக விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக தனது youtube தளத்தில் பேசிய சாட்டை துரைமுருகன் மதுரையின் அனைத்து காண்ட்ராக்ட் நபர்களிடமிருந்தும் முஸ்தபா கமிஷன் பெறுவதாக குற்றச்சாட்டினை தெரிவித்து இருக்கிறார் மேலும் மின்சார கொள்முதலிலும் தமிழக வெற்றிக்கழக அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டிருப்பதாக அவர் பேசி இருப்பது இணையத்தில் சலசலப்பை கிளப்பியிருக்கிறது
ரூ.15 லட்சம் கேட்டாரா?
முஸ்தபாவுக்கு சமீபத்தில் தவெக தலைமை மதுரை மாவட்டச் செயலாளர் பொறுப்பை வழங்கியது. அதைத் தொடர்ந்து கட்சிப் பணிகள் தீவிரமடைந்ததையடுத்து, கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளும் சூடுபிடித்தன. இந்தச் சூழலில்தான் முஸ்தபாவின் வலது கரங்கள் எனச் சொல்லப்படும் கனி ராஜா மற்றும் சபரி ஆகியோருக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த உரையாடலில், வார்டு பதவிக்கான பணத்தை எடுத்துக்கொண்டு வந்து பாயை (முஸ்தபா) சந்திக்கும்படி இருவரும் பேசிக்கொள்வது போன்ற உரையாடல்களும் இடம்பெற்றிருந்தன.
மறுப்பு தெரிவித்த முஸ்தபா
ஆடியோ வைரலானதைத் தொடர்ந்து, இதற்கு மறுப்புத் தெரிவித்து மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்துள்ளார். மேலும், இது மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியான பழைய ஆடியோ எனக் குறிப்பிட்ட அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும், முதல்வர் மீதும் களங்கம் கற்பிக்கவே திமுக இதுபோன்ற அவதூறுகளைப் பரப்புவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
முஸ்தபாதான் டான்: சாட்டை சொல்வது என்ன?
இந்த விவகாரம் குறித்து தனது யூடியூப் தளத்தில் பேசிய சாட்டை துரைமுருகன், “மதுரையைப் பொறுத்தவரைக்கும் முஸ்தபாதான் டான். அவர் எல்லாவிதமான காண்ட்ராக்டர்களிடமிருந்தும் வசூல் பெற்றுவிட்டார். அவர் இப்போது மும்பையின் மாணிக் பாட்ஷா மாதிரி மாறிவிட்டார். மதுரையைப் பொறுத்தவரைக்கும் இப்போது யார் அதிக வசூல் வாங்குகிறார்கள் என்பதுதான் கேள்வியே. ஒரு பக்கம் முஸ்தபா வாங்கிக்கொண்டிருக்கிறார்; ஒரு பக்கம் விஜய் கல்லானை வாங்கிக்கொண்டிருக்கிறார்” எனப் பேசியுள்ளார்.
மேலும், தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைப் போக்குவதற்காகத் தமிழக அரசு தனியாரிடமிருந்து ஒரு யூனிட்டுக்கு ரூ.34 வரை விலை கொடுத்து வெளியில் இருந்து மின்சாரம் வாங்குகிறது. இது தமிழக அரசுக்குப் பெரும் பணவீக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படும் சூழலில், இதுகுறித்துப் பேசிய சாட்டை துரைமுருகன், வெளியில் இருந்து மின்சாரம் வாங்குவதன் மூலம் எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர்களுக்கும் ஒரு யூனிட்டுக்கு ரூ.4 வரை லஞ்சமாகச் செல்கிறது எனப் பரபரப்பான குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.
சமீபத்தில் 137 கிலோகிராம் மெத்தம்பெட்டமைனுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி ஒருவர் சிக்கிய விவகாரம் பூதாகரமான நிலையில், தற்போது தவெக எம்எல்ஏ முஸ்தபாவின் ஆடியோவும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.
