தவெகவிற்கு நோ சொல்ல 2 காரணங்கள்: திமுக கூட நினைக்காத விஷயம்- முடிவை மாற்றும் அதிமுகவினர் – aiadmk cadres postpones tvk joining plan with two reasons and diversion over dmk

அதிமுகவை முழுமையாக தவெக விழுங்கிவிடுமா? என்று கேள்வி எழுப்பினால் என்ன பதில் சொல்வீர்கள். இதற்கு மாறுபட்ட பதில்கள் வரும். தற்போதைய சூழலில் அதிமுகவினர் தங்களது முடிவை மெல்ல மாற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான காரணங்களை பட்டியலிட்டுள்ளனர்.

அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலை எடுத்துக் கொண்டால் அதிமுக வாக்காளர்கள் பலரும் திமுகவிற்கு வாக்களித்துள்ளனர். உதாரணமாக வட சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், பெரம்பலூர், தூத்துக்குடி உள்ளிட்ட திமுக வென்ற தொகுதிகளை எடுத்து பார்த்தால் 50 சதவீதத்திற்கும் மேல் திமுக வாக்குகளை பெற்றிருக்கும். அதிமுகவில் இருந்து பிற கட்சிகளுக்கு தாவும் நிகழ்வுகள் 2016ஆம் ஆண்டில் இருந்தே பேசுபொருளாக மாறினாலும், விஜய் வந்த பின்னர் அதன் வேகம் பல மடங்கு அதிகரித்துவிட்டது.

எம்.ஜி.ஆர் ரூட்டை பிடித்த தவெக தலைவர் விஜய்

அடுத்த எம்.ஜி.ஆர் என்று தன்னை அடையாளப்படுத்தி கொள்வதில் ஒவ்வொரு பரப்புரை கூட்டத்திலும் விஜய் மும்முரம் காட்டினார். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றால் பெண்கள் மத்தியில் ஆதரவு அலை உருவானது. அதில் அதிமுக வாக்கு வங்கியும் அடங்கும். ஆனால் இதுபோன்ற காரணங்களால் அதிமுக காணாமல் போய்விடுமா? என்றால் இல்லை என்ற பதிலை தான் அரசியல் விமர்சகர்களும், மூத்த பத்திரிகையாளர்களும் கூறுகின்றனர். தற்போதைய சூழலை எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி செயல்பட வேண்டும் என்று தான் அறிவுறுத்துகின்றனர்.

வரலாறு படைத்த சி.எம் விஜய்…இனிமே திமுக சீன்ல இருக்காது

இடைத்தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி

உதாரணமாக நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை எடுத்துக் கொள்வோம். வாக்குப்பதிவிற்கு முன்பாக கட்டமைக்கப்பட்ட ஒரு விஷயம் என்னவென்றால் அதிமுக அவ்வளவு தான். இரண்டு தொகுதியிலும் டெபாசிட் போய்விடும். இனிமேல் அக்கட்சி எழுந்திருக்கவே முடியாது. மொத்தமாக தவெகவிற்கு வந்துவிடுங்கள் என்றெல்லாம் அறைகூவல் விடும் நிகழ்வுகள் அரங்கேறின. ஆனால் மதுராந்தகத்தில் 25.6 சதவீதமும், தாராபுரத்தில் 25.08 சதவீதமும் வாக்குகளை அதிமுக பெற்றது. இரண்டிலும் மூன்றாவது பிடித்தாலும் தமிழக அரசியல் களத்தில் தங்களுக்கென்று ஓரிடம் இருப்பதை உணர்த்தினர்.

தவெக இணைவிற்கு ”நோ”- அதிமுகவினர் சொல்லும் 2 காரணங்கள்

அதிமுகவினர் சிலரிடம் பேசும் போது, ஏற்கனவே தவெகவிற்கு தாவிய மூத்த தலைவர்கள் பலருக்கு சரியான பதவிகள் அளிக்கப்படவில்லை. முக்கியத்துவம் பெறாமல் இருக்கின்றனர். எனவே புதிதாக அதிமுகவில் இருந்து செல்ல விரும்புவோர் தற்போது வேண்டாம். தங்களுக்கான வாய்ப்பு வரட்டும். அப்புறம் பார்த்து கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்திருப்பதாக தெரிவித்தனர். மேலும் தவெக அணுகுமுறையில் இருக்கும் ஆபத்தை சுட்டிக் காட்டுகின்றனர். 60 ஆண்டுகளுக்கு மேல் எதிரணியில் பயணித்த திமுக கூட அதிமுக அழிய வேண்டும் என்று நினைத்தது இல்லை. தமிழக அரசியல் களத்தில் சரிக்கு சரியான போட்டியாக பார்த்து வந்தனர். ஆனால் தவெகவினர் அதிமுக அழிய வேண்டும் என்று நினைக்கின்றனர். இது மிகவும் ஆபத்தான போக்கு.ஜனநாயக நாட்டில் மாற்று சக்திகள், கொள்கைகளையும் வரவேற்க வேண்டும். ஆக்கப்பூர்வமான போட்டி மூலம் மக்கள் மனங்களில் வெற்றி பெற வேண்டும் என்று திட்டமிடலாம். ஆனால் ஒன்றை அழித்து அதில் வலுப்பெற வேண்டும் என்ற எண்ணமே தவறானது. எனவே தற்போதைய சுழலில் தவெகவை தவிர்ப்பது நல்லது என்ற எண்ண ஓட்டமும் அதிமுகவினரிடம் மேலெழுந்து வருவதாக குறிப்பிட்டனர்.

Source link